அரசாங்கம் எப்படிப்பட்டது என்பதற்கு அமைச்சர் பதவியேற்பு நிகழ்வு சாட்சி! – சுமந்திரன்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் நிகழ்த்திய ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்ட விடயங்கள்:
- ஆட்சியேறியிருக்கும் அரசாங்கம் எப்படிப்பட்டது என்பதை அதன் அமைச்சர் பதவியேற்பு நிகழ்வு பறைசாற்றிவிட்டது. தேசியக் கொடியில் சிறுபான்மைகளைக் குறிக்கும் நிறங்களை அகற்றிய கொடியைப் பறக்கவிடும் அளவிற்கு இருக்கிறது இந்த அரசாங்கம். பௌத்த குருக்களைத் தவிர வேறெந்த மதத் தலைவர்களையும் நிகழ்விற்கு அழைக்கவில்லை. இந்த அரசுக்கும், இதன் முகவர்களுக்கும் வாக்களித்த தமிழ் பேசும் மக்கள் தங்கள் தெரிவை மீளாய்வு செய்ய வேண்டும்.
- 19 ஆம் திருத்தச்சட்டத்தை நீக்கும் முயற்சிக்கு ஜனநாயகத்தை விரும்பும் எவரும் துணை போக முடியாது. 19 திருத்தச் சட்டத்தில் நடைமுறைச் சிக்கல்கள் சில இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்ய வழிமுறைகள் இருக்கின்றன. முற்றாக அகற்றுவதென்பது மீண்டும் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்கு இட்டுச் செல்லும் முயற்சியே.
- தேர்தல் வாக்கெண்ணல் நடந்த மதியம் முதலே போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டது. முதலில் குறித்த வேட்பாளரது இணைப்பாளரை நான் வெருட்டுவதாகச் சொன்னார்கள். சற்று நேரம் கழித்து, திரு. சித்தார்த்தன் ஐந்தாம் இடத்திலிருந்த நான் முதல் மூன்று இடங்களிற்குள் வந்து விட்டதாகச் சொன்னார். ஆனால் யாழ்ப்பாணத்திலிருக்கும் 11 தேர்தல் தொகுதிகளில் கட்சிக்குள் – மூன்றில் நான் முதலாமிடத்திலும், ஐந்தில் இரண்டாமிடத்திலும், மிகுதி மூன்றில் மூன்றாமிடத்திலும் இருக்கிறேன். இப்படியிருக்க, ஐந்தாம் இடமென்ற பேச்சு எங்கிருந்து வருகிறது? இறுதியில், இரண்டாமிடத்திலிருந்த திருமதி. சசிகலா ரவிராஜை வெளியில் தூக்கி வைத்துவிட்டு நான் அந்த இடத்திற்கு வந்ததாகச் சொன்னார்கள்.
- எத்தனை பொய்கள்? துரதிஷ்ட வசமாக கட்சியின் சக வேட்பாளர்களும் இந்தப் படலத்திற்குத் துணை போயிருக்கிறார்கள். இன்றைக்கு இவர்கள் தாம் சொன்னவற்றைத் திருத்திப் பதிந்திருக்கிறார்கள். வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ஆனால், பாதகம் நிகழ்ந்தாயிற்று. பிந்திய திருத்தங்களால் பயன் குறைவே.
- வாக்கெண்ணலில் சந்தேகம் இருப்பவர்கள் நீதிமன்றத்தை நாடவேண்டும். தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரசாங்க உத்தியோகர்களது நேர்மைக்குக் களங்கம் விளைவிக்கும் செயற்பாட்டை எவரும் பொறுப்பின்றிச் செய்து கொண்டிருக்கக் கூடாது. மீள் வாக்கெண்ணல் கோரப்படும் பட்சத்தில் நீதிமன்றில் நான் அதற்கு இணங்குவேன். எனது வெற்றியில் எனக்கேதும் ஐயம் கிடையாது. நாட்டின் தேர்தல் முறை மீதும், கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் மீதும் குறை நேராதிருக்க வேண்டும்.
- சிறீதரனையும், என்னையும் தோற்கடிக்கச் செய்யப்பட்ட முயற்சிகள் தெளிவாகத் தோல்வியடைந்திருக்கிறது. முயற்சி எடுத்தவர்கள் நிறுத்தாமல் தொடர்வது, அவர்களை அவர்களாகவே பாதாளத்தில் தள்ளும் செயற்பாடு.