தாயகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

“நாட்டில் நிலையான அரசு உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயகப் பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். அதற்கான உத்தரவாதத்தை நான் வழங்குகின்றேன்.”

– இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

அங்கு  அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் சரியான வரவேற்புக் கிடைத்திருக்கவில்லை.

இடைத்தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காகப் புலம்பெயர் முதலீட்டாளர்களைத் தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர்.

ஆனால், தற்போது நிலையான அரசு உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இந்த நிலையில் அதற்கான உத்தரவாதத்தை என்னால் வழங்க முடியும்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில், தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக்கொள்ள முடியும்.

புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீகக் கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!