நிலச் சுவீகரிப்பைத் தடுத்துநிறுத்த கூட்டமைப்புக்கே வல்லமையுண்டு! – முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன்
“வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களைச் சுவீகரிப்பதற்காக அரசு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கே இருக்கின்றது.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.
பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்காக அரசால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
தற்கால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“கிழக்கு மாகாணத்துக்குத் தொல்பொருள் என்ற போர்வையில் இராணுவத்தையும் பௌத்த குருமார்களையும் கொண்டதாக ஒரு ஜனாதிபதி செயலணியை அமைத்து, மக்களின் வாழ்விடங்களைச் சுவீகரிப்பதற்கு அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
அரசின் இராணுவ மயமாக்கல் திட்டத்தைத் தடுத்து நிறுத்தல், வடக்கு, கிழக்கு சுவீகரிப்பதற்காக மேற்கொள்கின்ற அத்தனை நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தல் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே இருக்கின்றது.
தமிழ் மக்களின் கட்சிகள் என்ற போர்வையில் களமிறங்கியுள்ள கட்சிகள் எல்லாம் அரசின் பின்னணியில் செயற்படுபவை. அவர்களால் அரசுக்கு எதிராகக் கருத்து வெளியிடமுடியாது. தங்களது பதவிகளைப் பாதுகாப்பதில் அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பார்கள்.
ஆகவே, அவர்களால் தமிழ் மக்களுக்கு விரோதமாக உருவாக்கப்படுகின்ற செயற்றிட்டங்களை முறியடிக்க முடியாது. முறியடிக்கக் கூடிய அத்தனை வல்லமையும் தமிழ்த் தேசியக் கூட்டப்புக்கு மாத்திரமே உண்டு” – என்றார்.