பாகிஸ்தானுக்கு வழங்கும் கடனுதவியை நிறுத்தியது சவுதி அரேபியா
பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த கடனுதவியும், கச்சா எண்ணெய் உதவியும் நிறுத்தப்படுவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த நட்புறவு முடிவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானின் நட்பு நாடுகள் பட்டியலில் பல ஆண்டுகளாக இருந்த நாடு சவுதி அரேபியா. இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நட்பு நீடித்து வந்தது. சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் அமைப்பில் பாகிஸ்தான் அங்கம் வகித்து வருகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு அரசுமுறை பயணமாக பாகிஸ்தானுக்குச் சென்ற சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அந்நாட்டு அரசுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.
பாகிஸ்தான் அரசுக்கு வழங்கப்பட்ட 6.2 பில்லியன் டொலர் மதிப்பிலான அந்த சலுகையில் 3 பில்லியன் டொலர் கடனுதவியாகவும், 3.2 பில்லியன் டொலர் அளவிற்கு கச்சா எண்ணெய் கடனாகவும் வழங்கவும் சவுதி ஒப்புதல் அளித்தது.
இதற்கிடையில், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் ஆதரவை பெற அந்த கூட்டத்தை கூட்ட பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டது. ஆனால் பாகிஸ்தானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்து வருகிறது.
இது தொடர்பாக கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி சவுதி அரேபியாவுக்கு எச்சரிக்கை விடும் வகையில் கருத்து தெரிவித்தார்.
அவரின் கருத்தால் ஆத்திரமடைந்த சவுதி அரேபியா அந்நாட்டுடனான உறவை துண்டிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட 6.2 பில்லியன் டொலர் கடனுதவியை சவுதி அரேபியா இரத்துச் செய்துள்ளது.