பாராளுமன்ற ‘ஒன்லைன்’ விண்ணப்பத்தை பூர்த்திசெய்தார் மஹிந்த
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/mahinda-Via-the-Online-Registration-System.jpg)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது தகவல்களைப் பூரணப்படுத்தி பாராளுமன்ற செயலகத்துக்குச் சமர்ப்பித்துள்ளார்.
பிரதமரினால் ஒன்லைன் விண்ணப்பப் படிவம் பூர்த்திசெய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, உதவிச் செயலாளர் நாயகம் டிக்கிரி ஜயதிலக உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் தகவல்களை ஒன்லைன் முறையில் பெற்றுக்கொள்ளும் முறையொன்று பாராளுமன்ற செயலகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னுதாரணமாக அமையும் வகையில் பூரணப்படுத்திக் கையளித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் நிலைமை காரணமாக தற்போது பாராளுமன்றத்தினுள் காணப்படும் தகவல் தொழிநுட்ப முறைமைகளைப் பயன்படுத்தி ஒன்லைன் மூலம் தகவல்கள் திரட்டப்படுவதுடன், இதன்மூலம் உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வருகை தராமல் தேர்தல் தொகுதிகளில் இருந்தே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளமுடியும்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் registration.parliament.lk எனும் இணையப் பக்கத்துக்கு பிரவேசித்து உரிய கடவுச்சொல்லை பயன்படுத்தி இந்த விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தக் கடவுச்சொல் தொடர்பில் அறிவுறுத்துவதற்கு பாராளுமன்ற பணியாட்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.