பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும்
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை, பாராளுமன்றத்தில் அமர்விற்கு முன்னர் , மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் பலர், தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை ஏற்கனவே சமர்ப்பித்துள்ளனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சொத்து விபரங்களை இதுவரை வழங்காதவர்கள், விரைவாக அதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தோல்வியடைந்த வேட்பாளர்கள், வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.