சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படையுங்கள் – வடிவேல் சுரேஷ்
“சிறிகொத்தவை ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். அத்துடன் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தையும் எமது பொறுப்பில் விடப்படல் வேண்டும். தவறின் ஜனநாயக ரீதியிலான பாரிய எதிர் விளைவுகளை ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குழுவினரும் அனுபவிக்க நேரிடும்.”
– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பதுளை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்துக்குத் தெரிவான வடிவேல் சுரேஷ்.
அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஆதரவாளர்களுடான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பாராளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் எனது முதல்நிலை வெற்றியை உறுதிப்படுத்திக் கொடுத்த எனது தொப்புள் கொடி உறவுகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்த்திய, உணர்வுபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எனதும், அண்ணன் அரவிந்குமாரினதும் வெற்றியைத் தடுப்பதற்கு பல்வேறு வகையில் பேரினவாதிகளை விட எம்மவர்களே பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர். ஒப்பந்த அடிப்படையில் சுயேச்சைக் குழுக்களை பேரினவாதிகள் களம் இறக்கியிருந்தனர்.
குறிப்பாக எம்மிருவரது வெற்றியைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் அனைத்தையும் எனது தொப்புள் கொண்டி உறவுகள் முறியடித்து, எம்மிருவரையும் முதல் நிலையிலேயே, வெற்றியடைய வைத்தனர். அத்துடன், எமக்கு எதிராகச் செயற்பட்ட அனைவரையும் மண்கவ்வச் செய்தார்கள்.
எமது வெற்றியைத் தடுப்பதற்குச் செயற்பட்ட சுயேச்சைக் குழுக்களுக்கு தகுந்த பாடத்தை எமது உறவுகள் புகட்டிவிட்டனர். அக்குழுக்கள் ஏற்பட்ட பாரிய பின்னடைவிலிருந்து அவர்களினால் மீளவே முடியாது. அந்தளவில் எமது மக்களின் செயற்பாடுகள் அமைந்துவிட்டன.
எமது நாட்டின் பிரதான தேசியக் கட்சியொன்றில் சிறுபான்மையினத்தாரின் பெறுமதிமிக்க வாக்குகளினால் முதல் நிலையில் தமிழர்கள் இருவருமே வெற்றிபெற, எம்மக்கள் பூரண பங்களிப்புக்களை வழங்கினர்.
நான் 49 ஆயிரத்து 762 வாக்குகளைப் பெற்று முதல் நிலையில் வெற்றி பெற்றதுடன் எனக்கு அடுத்த படியாக 45 ஆயிரத்து 491 வாக்குகளை, அண்ணன் அரவிந்குமாரும் பெற்றுள்ளார். இதனை எம்மால் என்றுமே மறக்க முடியாது.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கட்சியையும் நாட்டு மக்கள் அனைவருமே புறக்கணித்து விட்டனர். இதற்குப் பின்பும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது குழுவினரால், எம்மை ஆட்டிப் படைக்க முடியாது” – என்றார்.