தமிழரின் பிரதிநிதிகள் என்று கூறுவதற்கு கூட்டமைப்புக்கு அருகதை இல்லை – பீரிஸ்

“புதிய பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் குரலாக, ஏகப் பிரதிநிதிகளாக வாதிடுவதற்கு உரிமையுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் இனிமேல் கூறமுடியாது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 ஆசனங்களைப் பெற்றிருந்தது.இம்முறை 10 ஆசனங்களை மாத்திரமே பெற்றுள்ளது. தமிழ் மக்கள் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மாத்திரம் நம்பிக்கை கொள்ளவில்லை.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி முதலான கட்சிகளுக்கும் தமிழ் மக்களின் நம்பிக்கை கிடைத்துள்ளது.

அத்துடன், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் சட்டம் உள்ளிட்ட அரசியல் ஆலோசனைகளை வழங்கி வந்தது.

கடந்த நல்லாட்சி அரசில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை காணப்படவில்லை. அந்தப் பெரும்பான்மைக்குத் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியது.

இதனைவிட, 13ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபைக்கு 36 அதிகார கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு அவற்றை சரியாகப் பயன்படுத்தவில்லை” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!