இணைந்து செயற்பட விக்கிக்கும் கஜனுக்கும் சுமந்திரன் அழைப்பு

“தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோல், தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பினருக்கும் மக்கள் அளித்த ஆணையையும்  அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழ் மக்களின் நெருக்கடியான காலகட்டத்தில் எம்முடன் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்தப் பகிரங்க அழைப்பை அவர் விடுத்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 10 பேராகவே அமரப் போகின்றது. யாழ்ப்பாணத்தில் இருந்து விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரகுமாருடன் இன்னொருவர் பாராளுமன்றம் வரவுள்ளனர். அவர்கள் எங்களோடு இணைந்து அல்லது நாங்கள் அவர்களோடு இணைந்து செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இந்த பாராளுமன்றத்தில் எதிர்கொள்ளவுள்ள சவால் என்பது மிக பெரியது. அதை நாம் இணைந்து எதிர்கொள்ள வேண்டும். உங்கள் மீதும் நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்துள்ளனர். உங்களுக்கு மக்கள் கொடுத்த ஜனநாயகத் தீர்ப்பை நாம் ஏற்றுக்கொள்வதைப் போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 10 ஆசனங்கள் கொடுத்துள்ள மக்களின் ஜனநாயகத் தீர்ப்பையும் நீங்கள் மதிப்பீர்கள் என நம்புகின்றேன்.

நாங்கள் இணைந்து தமிழ் மக்களுக்கு எதிராக எழுந்துள்ள இந்தப் பாரிய சவாலை முறியடிக்க – சேர்ந்து பயணிக்க எங்களுடைய கதவுகள் திறந்துள்ளன” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!