லெபனானை உலுக்கிய பயங்கர வெடி விபத்து: 100 பேர் பலி; 4,000 பேர் படுகாயம்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/08/leba-explosion_1024.jpg)
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் நடந்த அதிபயங்கர வெடி விபத்து மொத்த நாட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் லெபனான் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பெய்ரூட்டில் உள்ள ஒரு துறைமுகத்தில் நேற்று முன்தினம் பிற்பகலில் வழக்கம்போல் பணிகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது துறைமுகத்தின் ஒரு பகுதியில் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் துறைமுகப் பகுதியில் வானுயரத்துக்கு கரும்புகை சூழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து அவர்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் காற்றின் வேகத்தால் தீ, துறைமுகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் துறைமுகத்தில் இருந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வேதிப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடிப்பு ஒட்டுமொத்த பெய்ரூட்டையும் உலுக்கியது. துறைமுகத்தை சுற்றி இருந்த நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.
துறைமுகத்தில் இருந்து ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடங்களும் முற்றிலுமாக சிதைந்து போனது. இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெடிப்பு நடந்த இடத்தில் இருந்த சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாலும், இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் சிக்கியிருப்பதாலும் எண்ணிப்பார்க்க முடியாத வகையில் பலி எண்ணிக்கை உயரலாம் என லெபனான் அரசு கவலை தெரிவித்துள்ளது.
பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த 6 ஆண்டுகளாக சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்ததால் இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் துறைமுகத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களிலிருந்து தீ பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டையே உலுக்கிய இந்த வெடி விபத்து தொடர்பாக லெபனான் ஜனாதிபதி மைக்கேல் ஆன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதை சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.