சாதனை படைத்த விண்வெளி வீரர்கள்
‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தின், ‘க்ரூ டிராகன்’ விண்கலம் மூலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற இரண்டு நாஸா விண்வெளி வீரர்கள், நேற்று பூமிக்கு திரும்பி, சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், மே, 31ம் திகதி, க்ரூ டிராகன் என்ற விண்கலத்துடன் கூடிய, ‘பால்கன் – 9’ ரக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. அதில், நாசா விண்வெளி வீரர்களான, பாப் பென்கென், டக் ஹர்லி ஆகியோர்அனுப்பி வைக்கப்பட்டனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைந்த அவ்விருவரும், இரண்டு மாதங்களாக அங்கு ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
இந்நிலையில், பாப் பென்கென், டக் ஹர்லி இருவரும், நேற்று முன்தினம், அங்கிருந்து பூமிக்கு புறப்பட்டனர். அதிகாலை, 5:00 மணிக்கு, க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பிரிந்து, பூமியை நோக்கி பயணிக்கத் துவங்கியது.திட்டமிட்டபடி, மெக்சிகோ வளைகுடாவில், ‘பாராசூட்’கள் உதவியுடன், நேற்று அதிகாலை, 12:18 மணிக்கு விண்கலம் இறங்கியது. கடந்த, 45 ஆண்டுகளில், வர்த்தக ரீதியாக வடிவமைக்கப்பட்ட விண்கலம் மூலம், நாஸா விண்வெளி வீரர்கள் பூமிக்கு திரும்பியுள்ளது இதுவே முதன்முறையாகும்.கடலில் விழுந்த விண்கலத்தை மீட்ட ஸ்பேஸ் எக்ஸ் குழுவினர், அதிலிருந்த நாஸா வீரர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் ஹூஸ்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, அவர்களின் குடும்பத்தினர், அதிகாரிகள் என, பலரும் ஒன்றுகூடி, உற்சாகமாக வரவேற்றனர்.