சர்வதேச அமைப்புகள் அரசை மிரட்ட முடியாது – மஹிந்த

“ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இலங்கையின் இறையாண்மையை மீறி அரசை மிரட்ட முடியாது. அந்த மிரட்டலுக்கு நாம் அடிபணியவும் தயாரில்லை.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

குருநாகலில்   நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலைதூக்க இடமளியோம். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று ஒரு தீவிரவாதத் தாக்குதல் இங்கு மீண்டும் இடம்பெறத் சந்தர்ப்பம் வழங்கமாட்டோம். கடந்த நல்லாட்சிக்  காலத்தில் இடம்பெற்றதுபோல் சர்வதேச அமைப்புகள் எமது நாட்டின் உள்விவகாரங்களில் மீண்டும் தலையிட அனுமதியோம்.

புதிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவதே எமது இலக்கு. அதற்காகவே மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அரசு அமைக்க மக்களின் ஆணையைக் கோரி நிற்கின்றோம்.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக பிரதான எதிர்க்கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டுப்   போட்டியிடுகின்றது. உங்கள் மதிப்புமிக்க வாக்குகளை அத்தகைய கட்சிகளுக்கு வழங்கி வீணாக்கக்கூடாது.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதைவிட ‘சிறிகொத்தா’ தலைமையகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றப் போராடும் தனிநபர்களுக்காக உங்கள் வாக்குகளை வழங்காதீர்கள்.

ஒரு சிறந்த எதிர்காலத்துக்காக நாட்டை அபிவிருத்தி செய்வதற்குத் தயாராக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டு’ சின்னத்துக்கே உங்கள் வாக்குகளைத் தவறாது வழங்குங்கள்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!