நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தலைவரும் யாழ்.மாவட்ட தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட ஊடகத்துறை மாணவனுமான ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு  நடைபெற்றது.

இந்த நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவிர்கள், பாடசாலை நண்பர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்கள் தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஊடகத்துறையில் கல்வி கற்றுக்கொண்டிருந்த ஊடகவியலாளர்  சகாதேவன் நிலக்சன் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

அன்று அதிகாலை வேளை யாழ். கொக்குவில், ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள அவருடைய வீடு இராணுவப் புலனாய்வாளர்களினாலும், இராணுவ ஒட்டுக்குழுவினராலும் முற்றுகையிடப்பட்டது.

வீட்டில் இருந்த நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுதக் குழுவினர் வீட்டு வாசலில் அவரை அழைத்து விசாரித்தனர். இதன்போது நிலக்சனின் தந்தை, தாய் மற்றும் சகோதரன் ஆகியோரின் கண் முன்னால் அவரைச் சுட்டுப் படுகொலைசெய்த ஆயுதக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நிலக்சன் படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் குற்றவாளிகள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!