தமிழர் தாயகத்தில் வாக்களிக்க முன் ஒரு நிமிடம்…
இங்கே நான் தெரிவிக்கப்போகும் கருத்துக்கள் வாசகர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட தமிழ்க்கட்சியின் பெயரைச் சுட்டிக்காட்டி, அந்தக் கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அமையாது. மாறாக, தமிழ்ப்பிரதேசங்களில் – குறிப்பாக தமிழ்த்தேசியக் கொள்கைகளுடன் களமிறங்கியுள்ள தமிழ்க்கட்சிகள் போட்டியிடும் இலங்கையின் வட கிழக்கில், வாக்காளர்களாகிய நாம் ஏன் ஒருமித்து ஒரு கட்சியை தெரிவு செய்ய வேண்டுமென்ற தெளிவினை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். தமிழர்களாகிய நாம் ஒருமித்து தெரிவு செய்யும் அந்த ஒரு கட்சி எதுவென்பதை தீர்மானிக்க வேண்டியது வாக்காளர்கள் ஒவ்வொருவரினதும் கடமை!
தமிழர்களாகிய நாங்கள் ஒன்றுபட்டு தமிழ்த்தேசியத்தின்பாலுள்ள ஒரு கட்சியை தெரிவு செய்யத் தவறும் பட்சத்தில் – எங்களின் வாக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிக்கப்படுகையில் தான், தென்னிலங்கைக் கட்சிகளில் எங்கள் பிரதேசங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்களின் ஆசியுடன் பாராளுமன்றம் சென்று விடுகின்றனர். இதுதான் வரலாறு!
உதாரணமொன்றின் மூலம் இதை விளக்கலாம் என எண்ணுகின்றேன். கடந்த பொதுத்தேர்தல் 2015 இல் யாழ் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈபிடிபி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இவற்றுடன் தென்னிலங்கைக் கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும்(UPFA) ஐக்கிய தேசியக் கட்சியும் போட்டியிட்டன. இலங்கைத் தமிழர்களின் ஒரே தெரிவு எனும் கோசத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், மாற்றுக்கட்சி எனும் கோசத்துடன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸும் போட்டியிட்டன.
2015 பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை:
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 207,507
ஈபிடிபி – 30,232
ஐக்கிய தேசியக் கட்சி – 20,025
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17,309
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – 15,022
இதனடிப்படையில்,
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 05
ஈபிடிபி – 01
ஐக்கிய தேசியக் கட்சி – 01 என ஆசனங்களைப் பெற்றுக் கொண்டன.
ஆசன ஒதுக்கலுக்காக கணக்கில் எடுக்கப்படும் செல்லுபடியான மொத்த வாக்குகளின் ஐந்து வீதம் 15,015 ஆக இருந்தது. இங்கே 15,022 வாக்குகளைப் பெற்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸினால் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியாமல் போனது மட்டுமன்றி, இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு கிடைக்க வேண்டிய மேலதிக இன்னொரு ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 8 வாக்குகள் குறைவாக பெற்றிருப்பின், யாழ் மாவட்டத்தின் ஆசனப்பங்கீடு பின்வருமாறு இருந்திருக்கும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 207,507 – 06 ஆசனங்கள்
ஈபிடிபி – 30,232 – 01 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி – 20,025
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 17,309
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் – 15,014
ஆக, தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து, தமிழ்க்கட்சிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆசனங்களை குறைத்து, அந்த ஆசனங்களை தென்னிலங்கைக் கட்சிகளுக்கு பெற்றுக் கொடுத்து, தமிழர்களின் பாராளுமன்றப் பலத்தை நலிவடையச் செய்யும் கைங்கரியங்களையே சிறு சிறு தமிழ்க்கட்சிகள் திறம்படச் செய்து வருகின்றன. இந்தச் சூட்சுமம் தெரிந்துதான் தேர்தல் காலத்தில் தென்னிலங்கைக் கட்சிகளும் வடக்கு கிழக்கில் பாய்விரித்துப் படுத்திருக்கின்றன.
தமிழர்களைப் பொறுத்தவரையில் 2020 பொதுத் தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். 2009 இற்குப் பின்னர், எப்பொழுதும் வடக்கு கிழக்கு தமிழர்களினால் நிராகரிக்கப்பட்டு வந்த தரப்பினர் தான் தெற்கில் அரசமைக்கப் போகின்றார்கள் என்பது வெள்ளிடைமலை. அந்த அரசுடன் – சமஷ்டி கேட்டால் சிறை தான் பதில் என வீறாப்பு பேசுபவர்களுடன் சரிசமமாக அமர்ந்து, எங்களுக்கான உரிமைகளையும் – உரிமைகளுடன் கூடிய அபிவிருத்தியையும் பெற்றுத்தரவல்ல கட்சியொன்றினை ஏக மனதான அங்கீகாரம் கொடுத்து, தமிழர்களின் பலமாக பாராளுமன்றம் அனுப்பி வைப்பது ஒவ்வொரு தமிழனின் இன்றைய கடமை.
விரும்பியோ விரும்பாமலோ தென்னிலங்கைக் கட்சிகளை தமிழர் தேசத்தில் அடியோடு நிராகரிக்க வேண்டிய தேவை ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் உண்டு. தெற்கில் ஏற்படுத்தப்படும் ஒழுங்குகளுக்கமைய தமிழனின் இருப்பு கேள்விக் குறியாக்கப்படும் இன்றைய நிலையில், தென்னிலங்கைக் கட்சிகள் எங்கள் முன்னெறியும் வாக்குறுதிகளையும் தாண்டி, அவற்றை நிராகரித்து தமிழ்த்தேசியத்தை வலியுறுத்தும் கட்சியுடன் பயணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இரண்டு, மூன்று என தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கிடையே ஆசனங்களைப் பிரித்து தமிழர்களின் அரசியல் பலத்தை கூறு போடாமல், நாங்கள் தெரிவு செய்யும் தமிழ்த்தேசியக் கட்சி எங்களின் ஒரேயொரு கட்சியாக – பெரும்பான்மைத் தமிழரின் ஆணையைப் பெற்ற கட்சியாக – அரசியல் பலத்துடன் பாராளுமன்றம் செல்ல வேண்டியது அவசியம்.
அந்த ஒரே கட்சி எதுவென, உங்களின் வாக்குகளை சிதறடித்து வீணாக்க முதல் தெரிவு செய்து கொள்ளுங்கள்!