மீண்டும் காட்டாட்சிக்கு மக்கள் இடம் தரமாட்டர் – மங்கள
“இலங்கையில் மீண்டும் காட்டாட்சிக்கு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். அந்த வழியில் செயற்பட முயற்சிப்பவர்களை மக்களுடன் நாம் சேர்ந்து வீட்டுக்கு அனுப்பிவைப்போம்.”
– இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
“இந்த நாடு மக்களுக்குத்தான் சொந்தம். அதிகார வெறியிலும், பதவி ஆசையிலும் இருப்பவர்களுக்கு இந்த நாடு சொந்தமல்ல. நாட்டை யார் ஆட்சி செய்வது என்று மக்களே தீர்மானிப்பார்கள். யாரை வீட்டுக்கு அனுப்புவது என்றும் அவர்களே முடிவெடுப்பார்கள்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘அதிகார வெறித்தனத்திலும் பதவி ஆசையிலும் இருப்பவர்களுக்கு எதிராக மங்கள சமரவீரவுடன் இணைந்து செயற்பட நான் தயாராக இருக்கின்றேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்திருந்தார். இது தொடர்பில் மங்களவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்ற அரசியலிருந்துதான் நான் விலகியிருக்கின்றேன். ஆனால், செயற்பாட்டு அரசியலில் மக்களுடனும் சந்திரிகா போன்ற அரசியல் விற்பன்னர்களுடன் நான் சேர்ந்து இயங்குவேன்.
சந்திரிகா பழுத்த அரசியல்வாதி. 2015இல் ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு அவர் வெளியிலிருந்து பெரும் பணியாற்றினார்.
தற்போது நாடாளுமன்ற அரசியலிருந்து நாம் விலகியிருந்தாலும் நாடாளுமன்றத்துக்கு யார் செல்ல வேண்டும் என்பதை மக்களுடன் சேர்ந்து தீர்மானிப்போம்.
மக்களின் அனுமதியுடன்தான் எவரும் ஆட்சிக்கு வரலாம். அதுபோல் மக்களின் அனுமதியுடன்தான் அதிகாரத்தில் உள்ளவர்கள் எதையும் செய்யலாம். அதைவிடுத்து ஆட்டம் போடுவோர் வீட்டுக்குத்தான் போவார்கள்” – என்றார்.