தேர்தலை ஒத்திவைக்க சொல்லவில்லை – ட்ரம்ப்

”அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென நான் கூறவில்லை. தபால் வாயிலாக ஓட்டளிக்கும் போது, முடிவுகளை அறிவிக்க தாமதமாகி, அதனால் சிக்கல்கள் ஏற்படலாம் என்று தான் கூறினேன்” என அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 3ம் திகதி நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

பெரும்பாலான மாகாணங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ட்ரம்பிற்கு பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் நேற்று முன்தினம் கூறியதாவது:

“கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் பாதுகாப்பாக வாக்க‌ளிக்க முடியாத சூழல் நிலவுகிறது. தபால் வாயிலாக வாக்க‌ளித்தால் துல்லியமான முடிவுகளை அறிந்து கொள்வதில் பிரச்னை ஏற்படும். அதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது.

எல்லாருமே தபால் வாயிலாக வாக்க‌ளித்தால் அது, அமெரிக்க வரலாற்றில் மோசமான தேர்தலாகவே இருக்கும். இது சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, மக்கள் பாதுகாப்பான முறையில் வாக்க‌ளிக்கும் சூழல் ஏற்படும் வரை, ஜனாதிபதித் தேர்தலை தள்ளி வைக்கலாம்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ‘தோல்வி பயம் காரணமாகவே ட்ரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்’ என எதிர்க்கட்சியினர் கூறினர். இதற்கு விளக்கம் அளித்து ட்ரம்ப் நேற்று கூறியதாவது:-

“ஜனாதிபதித் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என நான் கூறவில்லை. அதில் எனக்கு விருப்பமும் இல்லை. எல்லாருமே தபால் வாயிலாக வாக்க‌ளித்தால், அதன் முடிவுகளை அறிவிப்பதற்கு பல வாரங்களாகும். அதனால், தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படும். தபால் வாயிலாக வாக்க‌ளிப்பது என்பது முறையான தேர்தலாக இருக்காது. தேர்தலை தள்ளி வைப்பதில் எப்படி விருப்பமில்லையோ, அதுபோல் முடிவுகளை அறிந்து கொள்வதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாக காத்திருப்பதிலும் விருப்பமில்லை. வாக்கு எண்ணிக்கை நீண்ட நாட்கள் நடக்கும் போது, பதிவான வாக்குகளில் குழப்பம் ஏற்படலாம். சில வாக்குகள் மாயமாகலாம். இதனால், தேர்தல் நடத்துவதில் எந்த பலனும் இல்லை” – இவ்வாறு அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!