சகல உரிமைகளுடனும் தமிழ் மக்கள் வாழ்கின்றனர் – மஹிந்த
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/mahinda-3.jpg)
“இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போன்று அனைத்து உரிமைகளுடன் சுதந்திரமாக வாழ்கின்றார்கள். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியலுக்காகவே புலம்புகின்றனர்” என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அரசியல் தீர்வு மட்டுமே தமிழர்களின் குறிக்கோள். அந்தத் தீர்வை நாம் புதிய ஆட்சியில் வழங்குவோம். அது அனைத்து இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான தீர்வாகவே இருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்:-
“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி அரசியல் செய்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. வடக்கு, தமிழ் தமிழ் மக்கள் இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்களுடன் ஒற்றுமையாக வாழவே விரும்புகின்றார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ தமக்கும் புலி வேசம் போட்டு தமிழ் மக்களுக்கும் புலி வேசம் போடுகின்றார்கள்.
பிரபாகரன் ஆயுதத்தால் பெற முடியாத தனிநாட்டுத் தீர்வை – நல்லாட்சி அரசு வழங்காத சமஷ்டித் தீர்வை ராஜபக்சக்களிடம் மிரட்டிப் பெறலாம் என்று சம்பந்தன் அணியினர் தப்புக்கணக்குப் போடுகின்றார்கள். அவர்களின் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது.
இது ஸ்ரீலங்கா; இது எங்கள் தாய் நாடு; சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களுக்கும் சொந்தமான நாடு. இந்த நாட்டை இரண்டாக்க முடியாது. இந்த நாட்டிலுள்ள சகல இனத்தவர்களுக்கும் உரிய பொதுவான அரசியல் தீர்வையே நாம் வழங்குவோம். தனிநாடு, சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை” – என்றார்.