அமெரிக்க ஓபன் டென்னிஸில் இருந்து ஆஷ்லி பார்ட்டி விலகல்
அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் போட்டியிலிருந்து தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவுஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி விலகியுள்ளார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் அடுத்த மாதம் (ஓகஸ்டு) 31-ஆம் திகதி முதல் செப்டம்பர் 13-ஆம் திகதி வரை நடக்கிறது. கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் நடக்கவில்லை. இதனால் அமெரிக்க ஓபன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், இன்னொரு பக்கம் அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் வீரர், வீராங்கனைகள் ஒருவித கலக்கத்தில் உள்ளனர். ரசிகர்கள் இன்றி கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இந்த போட்டி நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் அமெரிக்க ஓபனில் இருந்து விலகுவதாக உலகின் முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (அவுஸ்திரேலியா) அறிவித்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 24 வயதான ஆஷ்லி பார்ட்டி கூறுகையில்,
‘நானும், எனது அணியினரும் சின்சினாட்டி ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் போட்டிக்காக இந்த முறை அமெரிக்காவுக்கு செல்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறோம்.
அமெரிக்க ஓபன் மற்றும் சின்சினாட்டி இரண்டும் எனக்கு பிடித்தமான போட்டிகள். ஆனால் கொரோனா காரணமாக அங்கு சென்று விளையாடுவதில் குறிப்பிடத்தக்க அபாயம் இன்னும் உள்ளது. இதனால் வேறு வழியின்றி போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். அடுத்த ஆண்டு அமெரிக்க ஓபனில் ஆடுவதை எதிர்நோக்கி உள்ளேன். செப்டம்பர் மாதம் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் கலந்து கொள்வது குறித்து இனி வரும் வாரங்களில் முடிவு செய்வேன்’ என்றார்.
ஏற்கனவே விம்பிள்டன் சாம்பியன் சிமோனா ஹாலெப் (ருமேனியா), நடப்பு அமெரிக்க ஓபன் சாம்பியன் பியான்கா ஆன்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோரும் அமெரிக்க ஓபனில் இருந்து பின்வாங்கி விட்டனர். அதே சமயம் முன்னாள் சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அமெரிக்க ஓபனில் களம் இறங்க இருப்பதாக அவரது குழுவினர் தரப்பு தெரிவித்துள்ளது.
இதே போல் முதலில் தயக்கம் காட்டிய முதல் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 2-ம் நிலை வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்), டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) உள்ளிட்டோர் அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படும் ஆகஸ்டு 22-ஆம் திகதி தொடங்கும் சின்சினாட்டி ஓபனில் விளையாட இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அமெரிக்க ஓபனிலும் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.