பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பணிபுரிபவருக்கு கொரோனா

லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு  கொரோனாத் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா தொற்றுக்குள்ளனவர் கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளருடன் தொடர்புடையவர் என விசாரனை மூலம் தெரியவந்துள்ளது.

அவருடன் தொடர்பானவர்களை அடையாளம் காணுவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் 2,078 ஆவது நபராகக் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருளுக்கு அடிமையான கைதியை அடுத்து, கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு நிலையத்திலும் அதனுடன் தொடர்புபட்டவர்களுமாக இதுவரை 600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளளனர் என்று தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 2,811 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,333 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, அடையாளம் காணப்பட்ட 2,811 தொற்றாளர்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் 31 பேரும், வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கையர் 917 பேரும் அடங்குகின்றனர். அத்துடன், கடற்படையினர் 906 பேரும் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய 44 பேரும் உள்ளடங்குகின்றனர். கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்புடைய 600 பேரும் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 313 பேரும் மொத்த எண்ணிக்கையில் அடங்குகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 467 நோயாளிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2,333 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதேவேளை, வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின்ல் 86 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!