அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டி?

அமெரிக்க துணை ஜனாதிபதிப் பதவிக்கு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கமலா ஹாரிஸ் தேர்வாக வாய்ப்பிருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில், முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், போட்டியிடுகிறார். துணை அதிபர் பதவிக்கு போட்டியிட உள்ள வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில், ஜோ பிடன் ஈடுபட்டுள்ளார்.

அதற்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜோ பிடன் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரது கையில் இருந்த காகிதத்தில் சில குறிப்புகள் எழுதப்பட்டு இருந்தன. அந்த புகைப்படம் அமெரிக்க ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

அதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா மாகாண செனட்டருமான கமலா ஹாரிஸ் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் கீழ், மனக்கசப்புகளை மனதில் சுமக்காதவர்; என்னுடன் பிரசாரங்களில் ஈடுபட்டவர்; திறமையானவர்; பிரசாரத்திற்கு பேருதவியாக இருக்கக் கூடியவர்; மரியாதைக்குரியவர் என ஐந்து விடயங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. இந்நிலையில், கமலா ஹாரிஸ் குறித்து, ஜோ பிடனுக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதால், துணை ஜனாதிபதிப் பதவிக்கு போட்டியிட அவருக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுகுறித்து, ஜோ பிடன் தரப்பு கருத்து தெரிவிக்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!