சீனாவில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது

சீனாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று மூடப்பட்டது.

அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகள் தனிநபர்களின் தகவல்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான ஆராய்ச்சிகள் ஆகியவற்றை அமெரிக்காவில் உள்ள தனது தூதரகத்தின் உதவியோடு சீனா திருட முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள சீன தூதரகத்தை உடனடியாக மூட ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த சீனா அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது எனக்கூறி கண்டனம் தெரிவித்தது.

அதோடு நிற்காமல் அமெரிக்காவுக்கு பதிலடி தரும் விதமாக சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிச்சுவான் தலைநகர் செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகம் நேற்று காலை மூடப்பட்டது. தூதரகத்தில் இருந்த அமெரிக்க கொடி இறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூதரக கட்டிடத்தை சீனா தன் வசமாக்கிக்கொண்டது.

செங்டு நகரில் இந்த அமெரிக்க தூதரகம் கடந்த 1985-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இங்கு 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் சுமார் 150 பேர் உள்ளூரில் இருந்து பணியமர்த்தப்பட்டவர்கள் ஆவர்.

அவர்கள் அனைவரும் நேற்று தூதரகத்தில் இருந்து வெளியேறியதும் தூதரக கட்டிடத்திற்கு பூட்டு போடப்பட்டது.

நேற்று முன்தினம் முதலே தூதரகம் அமைந்துள்ள பகுதி பரபரப்பாக இருந்தது. அமெரிக்க அதிகாரிகள் காரில் வருவதும், செல்வதுமாக இருந்தனர். மிகப்பெரிய கன்டெய்னர் லாரி வரவழைக்கப்பட்டு தூதரகத்தில் இருந்த பொருட்கள் எடுத்துச்செல்லப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!