இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் 60 பேர் படுகாயம்
அமெரிக்காவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் 60 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவின் மின்னசொட்டா மாகாணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பின வாலிபரின் கழுத்தில் பொலிஸ்காரர் ஒருவர் தனது கால் முட்டியால் அழுத்தியதில் அந்த வாலிபர் உயிரிழந்தார். இதையடுத்து இனவெறிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. பிளாக் லைவ் மேட்டர் என்ற பெயரில் கறுப்பின மக்களுக்கு நீதி கேட்டு இனவெறி எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் பெரும்பாலான நகரங்களில் இந்தப் போராட்டம் சற்று தணிந்து இருந்தாலும், துறைமுக நகரமான சியாட்டில் இனவெறிக்கு எதிரான போராட்டம் வீரியம் குறையாமல் இருந்து வருகிறது.
பிளாக் லைவ் மேட்டர் அமைப்பினர் தொடர்ந்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் இனவெறி எதிர்ப்பாளர்கள் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இந்த மோதல் கலவரமாக வெடித்தது.
போராட்டக்காரர்கள் பொலிஸார் மீது கற்கள், கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்டவற்றை வீசி எறிந்து தாக்குதலில் ஈடுபட்டனர். அதேபோல் பொலிஸார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை குண்டுகளையும் வீசி எறிந்தனர்.
இந்த கலவரத்தில் சுமார் 60 பேர் படுகாயமடைந்தனர். அதே சமயம் கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 47 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.