வடக்கைச் சீரழித்த விக்கியை மக்கள் தோற்கடிக்கவேண்டும்- கணேஸ்வரன்

“வடக்கு மாகாண சபையைச் சீரழித்த முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், அவர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியையும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் யாழ்ப்பாண மாவட்ட மக்கள் தோற்கடிக்க வேண்டும். விக்னேஸ்வரனை அரசியலுக்குள் இழுத்துக்கொண்டுவந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் யாழ்.மாவட்ட மக்கள் இம்முறை தக்க பாடம் புகட்ட வேண்டும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“வடக்கு மாகாண சபையின் அதிகாரங்கள் 5 வருடங்கள் தமிழர்களின் கைகளில் இருந்த போதிலும் அதனை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் துஷ்பிரயோகப்படுத்தினார். மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்காமல் அவர் தான்தோன்றித்தனமாகச் செயற்பட்டார். இதனால் வடக்கின் அபிவிருத்திக்கென மத்திய அரசிடமிருந்து வந்த பெருமளவு நிதிகள் திரும்பிச் சென்றன. ஒட்டுமொத்தத்தில் வடக்கு மாகாண சபையை விக்னேஸ்வரன் சீரழித்தார்.

5 வருடங்கள் முதலமைச்சர் கதிரையில் இருந்த அவர், வடக்கு மக்களுக்கென எந்தவித நன்மைகளையும் செய்யவில்லை. நூற்றுக்கணக்கான தீர்மானங்களைச் சபையில் நிறைவேற்றிய போதிலும் அவற்றில் ஒன்றைக்கூட நடைமுறைப்படுத்த வக்கில்லாதவராக அவர் இருந்தார்.

வடக்கு மாகாண சபையில் பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெறக் காரணகர்த்தாவாக அவர் இருந்தார். இந்த ஊழல், மோசடியால் அமைச்சரவை மாற்றப்பட்டது. ஆனால், பழைய அமைச்சரவைக்குத் தலைமை தாங்கிய விக்னேஸ்வரன், தனது முதலமைச்சர் பதவியை இராஜிநாமா செய்யவில்லை. பதவி ஆசையால் புதிய அமைச்சரவைக்கும்  தலைமை வகித்தார்.

அவர் முதலமைச்சர் கதிரையில் இருந்த காலத்தில் புதிய கட்சியை உருவாக்குவதிலேயே குறியாக இருந்தார். அதுதான் முதலமைச்சர் பதவிக் காலம் நிறைவடைந்து மறுநாளே புதிய கட்சியை அவர் ஆரம்பித்தார்.

இன்று அவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமைப் பதவியில் இருந்துகொண்டு யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளராகப் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றார்.

எனவே, அவரையும், அவர் தலைமையிலான கட்சியையும் யாழ்.மாவட்ட மக்கள் தோற்கடிக்க வேண்டும்.” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!