வைத்தியர் வேடம் போட்ட இளைஞர் பெண்கள் விடுதியில் கைது
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையின் பெண்கள் விடுதியில் வைத்தியர் போன்று தன்னை அடையாளப்படுத்தி வந்த நபர் ஒருவர், பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் திஹாரி, தர்கா மாவத்தையைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து இதயத் துடிப்புமானி – 01, போலி இறப்பர் முத்திரை – 01, சிரின்ஜர் – 01, சேலைன் குழாய் – 01, ஈ.சி.ஜி. ரோல் – 05, மடிக்கணனி – 01, தொலைபேசி – 01, மோட்டார் சைக்கிள் – 01 ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, அத்தனகலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.