மாகாண சபை முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – மிலிந்த மொறகொட

“பொதுமக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்காக மாகாண சபை முறைமையை உடனடியாக நீக்கவேண்டும்; உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்த வேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலிந்த மொறகொட கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸுக்குப் பின்னரான உலகத்தைக் கையாள்வதற்கு இலங்கைக்கு வலுவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸின் ஆரம்ப நாட்களில் வலுவான நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானம் எடுத்தல் காரணமாக நாடு நன்மையடைந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகப் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

தீர்க்ககரமான விதத்தில் செயற்படும், ஆனால் இறுதியில் பாராளுமன்றத்துக்குப் பதிலளிக்கும் கடப்பாடு உள்ள வலுவான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஏற்படுத்துவது குறித்து, சிந்தனை, ஆற்றலுடைய இலங்கையர்கள் அனைவரும் ஆராய வேண்டும்; கலந்துரையாட வேண்டும்; பபரப்புரை செய்யவேண்டும்.

அனைத்து இலங்கையர்களாலும் தெரிவு செய்யப்படுபவர் ஜனாதிபதி மாத்திரமே. இந்தப் பதவியில் உள்ளவர் அனைத்துப் பிரஜைகளுக்கும் பதிலளிக்கும் கடப்பாடு உள்ளவராகக் காணப்பட வேண்டும்.

பொதுமக்களின் நாளாந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண்பதற்காக மாகாண சபை முறைமையை உடனடியாக நீக்கவேண்டும். உள்ளூராட்சி சபைகளை வலுப்படுத்த வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!