புதிய அரசமைப்பு இன்றேல் தோற்றுப்போகும் இலங்கை- சம்பந்தன்

“இலங்கையில் தற்போது அரசமைப்பு சட்டபூர்வமாக இல்லை. இந்த நிலைமை தொடருமானால் இலங்கை சர்வதேச ரீதியில் தோல்வி அடைந்த நாடாகக் கருதப்படும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற இளைஞர் அணியினரின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கடந்த 65 வருடங்களாக அரசமைப்பை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. 1994 ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள மக்களும் தேர்தல்களில் அரசமைப்பை நிராகரித்து வந்துள்ளனர்.

அரசமைப்பு என்பது மக்களுடைய சம்மதத்துடன் மக்களின் ஒப்புதலுடன் மக்களின் இணக்கப்பாட்டுடன் ஏற்படுத்தப்பட வேண்டும்.

தற்போது இந்த நாட்டில் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும், ஐக்கிய நாடுகள் சபையினுடைய ஒப்பந்தங்கள் மற்றும் தீர்மானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் இலங்கையில் ஓர் அரசியல் சாசனம் இல்லை.

சிறந்த அரசியல் தீர்வை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் 90 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கின்ற நிலையில் நூற்றுக்கு 80 வீதமான தமிழ் மக்கள் வீட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழ் மக்களுடைய வாக்குகள் பிரிக்கப்படக்கூடாது. மாற்றுக் கட்சிகளுக்கு வாக்குகளை அளிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களைப் பெறக்கூடிய வகையில் தமிழ் பேசும் மக்கள் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைந்து மக்களை அறிவூட்டுவதுடன் தெளிவூட்ட வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!