கடைசித் தமிழன் இருக்கும்வரை தமிழனுக்கே இலங்கை சொந்தம் – சாணக்கியன்
“கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது. இது சிங்கள பௌத்த நாடு என்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்றிரவு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“குறுகிய அரசியல் இலாபத்துக்காக எனது தாயை விமர்சித்து இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்கிளிலும் பிரசாரம் செய்கிறார்கள். எனது தாயின் பிறப்பை நியாயப்படுத்த வேண்டிய கடமை எனக்குள்ளது. எனது தாய்க்குக் களங்கம் ஏற்படுத்த ஒருபோதும் நான் இடமளிக்கமாட்டேன்.
என்னுடைய தாயின் பெயர் குமாரி தேவிகா. அவருடைய தந்தை பழனியப்பாபிள்ளை பாலகிருஸ்ணன். அவர் யாழ்ப்பாணம், மானிப்பாய் கிராமத்தைச் சேர்ந்தவர். எனது அம்மாவின் அம்மா போலின் டயஸ். அவர் போத்துக்கேயர். என்னுடைய நிறத்துக்குக் காரணம் அவர்தான். இந்த நாட்டின் சட்டத்தின்படி எனது தாய் இலங்கைத் தமிழர்.
அரசியலுக்காகத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக ஒருவருடைய பிறப்பைக் கொச்சைப்படுத்திப் பேசுவது கேவலமான செயலாகும். தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றால் நீங்கள் செயற்படுத்தவுள்ள திட்டங்களை மக்களிடம் கூறி வாக்குகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். என்னைப் பற்றி ஒரு பொய் கூறும்போது அதைக் கூறுபவர்கள் பற்றி பல உண்மைகள் வெளிவரும். கண்ணாடி வீட்டுக்குள் இருந்து யாரும் கல்லெறிய வேண்டாம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி இளைஞர் ஒருவனுக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியது தவறா? தமிழரசுக் கட்சியின் சார்பில் இனைஞர் நாடாளுமன்றம் செல்லக் கூடாதா? எனது கரங்கள் சுத்தமானவை; இரத்தக்கறை படிந்த கரங்களல்ல. எனது செயற்பாடுகள் சரியாக இருந்தால் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்.
எமது இனத்தின் உரிமைக்காக என்றுமே குரலெழுப்புவேன். என்னை முழுமையாக நம்புங்கள். என் இறுதி மூச்சுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியிலே பயணிப்பேன். கடைசித் தமிழன் இந்த நாட்டில் வாழும்வரை இந்த நாடு தமிழனுக்குச் சொந்தமானது. இலங்கை சிங்கள பௌத்த நாடு என எனது கட்சியும் ஏற்றுக்கொள்ளாது; நானும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 304 நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் அதிகமான மேடைகளில் என்னைத்தான் விமர்சனம் செய்கிறார்கள். இதனை அவதானிக்கும்போது என்னுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இந்த அரசின் செயற்றிட்டத்தை எதிர்க்கின்ற வாக்குகளாகவே அமைய வேண்டும். தமிழ் மக்களின் உரிமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் மாத்திரமே பெற்றுக்கொடுக்க முடியும்.
2015ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 7 ஆயிரம் வாக்குகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழந்தோம். இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்ல வாக்களியுங்கள்” – என்றார்.