குருபரன் மீதான நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று – சரவணபவன்

“யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமார வடிவேல் குருபரன் மீதான நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலும் கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக் கழகச் சமூகத்தை எண்ணி வெட்கித் தலைகுனியும்படியாக வைத்துள்ளது.”

– இவ்வாறு தெரிவித்தார் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பொதுத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுபவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன்.

இது தொடர்பில் அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுபெரும் சொத்தாக கலாநிதி குமாரவடிவேல் குருபரன் காணப்படுகின்றார். ஆனால், இன்று அவரின் அருமையை, மாணவ சமூகத்துக்கு அவர் தேவைப்படுவதன் முக்கியத்துவத்தை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பேரவை உணரத் தவறியுள்ளது. அல்லது உணர்ந்தும் உணராமல் உள்ளது.

பல்கலைக்கழகம் என்பது ஒரு சுயாதீன நிறுவனம். எவ்வித அழுத்தங்கள் மற்றும் தலையீடுகள் இல்லாமல்தான் அதன் செயற்பாடு அமைய வேண்டும். இவ்வாறிருக்கையில் குருபரன் மீதான நடவடிக்கையை பல்கலையின் புலமை சார்ந்த சுயாதீனம் பறிக்கப்பட்ட நிலையாகவே கருதவேண்டியுள்ளது.

பேரவையானது பல்கலைக்கழக மானிய ஆணையம் எடுத்த முடிவை எந்த விதமான மீளாய்வும் இன்றி ஏற்றுக் கொண்டதாகவே தோன்றுகிறது. இதன் மூலம் இலங்கையில் சுயாதீன உயர் கல்வி நிறுவனத்தின் கட்டமைப்பின் தன்மையை இழக்கும் நிலையை நோக்கி நகர்கிறது.

2011ஆம் ஆண்டு முதல் ஒரு மூத்த விரிவுரையாளர் பதவியையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையின் தலைமையையும் கொண்டிருந்தமை நாட்டில் மனித உரிமைகளை உயர்த்துவதில் அவருக்கு பலமாக இருந்தது. அவர் சட்டத்துறையில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க துறைசார் நடைமுறைகள் ஏற்கனவே இருக்கின்றன. பேரவையானது பல்கலைக்கழக விவகாரங்களில் உள்ளிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எவரும் அல்லது எந்தவொரு அதிகாரமும் தலையிட அனுமதிக்க கூடாது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவுக்கு எதிராக போராட பேரவைக்கு அதிகாரம் இருக்கிறது. போராடியிருக்க வேண்டும்” – என்றுள்ளது.

  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!