இரட்டை வேடம் போடுகிறார் சஜித் ஆதரவு வழங்கமாட்டார்கள் மக்கள் – மஹிந்த
“வடக்குக்கு ஒன்றையும், தெற்குக்குப் பிறிதொன்றையும் நான் ஒருபோதும் கூறமாட்டேன். அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ யாழ்ப்பாணத்தில் குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றிக் குறிப்பிட்டுள்ளார். இரட்டை வேடம் போடுபவர்களுக்கு மக்கள் ஆதரவு வழங்கமாட்டார்கள்.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஹோமாகம நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில்:-
“பல்வேறு சவால்களுக்கு மத்தியில் 2004ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பை ஏற்றேன். குறுகிய காலத்தில் 30 வருடகால சிவில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. நாட்டின் அபிவிருத்திப் பணிகள் வடக்கு, தெற்கு வேறுபாடின்றி துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால், 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் அபிவிருத்திப் பணிகள் அரசியல் பழிவாங்கல்களுக்காக இடைநிறுத்தப்பட்டன.
தேசிய வளங்களை விற்பதில் ஐக்கிய தேசியக் கட்சி அரசு அதிக கவனம் செலுத்தியது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது. மத்தளை விமான நிலையத்தை இத்தியாவுக்கு வழங்குவதாற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமருடன் நேரில் பேச்சு நடத்தி மத்தளை விமான நிலைய விவகாரத்தைத் திருத்திக்கொண்டோம்.
கடந்த அரசில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான முரண்பாடு முழு அரச நிர்வாகத்தையும் பலவீனப்படுத்தியது. இதன் விளைவை மக்கள் எதிர்கொண்டார்கள். இந்த நிலைமை மீண்டும் தோற்றம் பெறக்கூடாது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை நாடாளுமன்றத்தின் ஊடாகவே செயற்படுத்தப்பட வேண்டும். அதற்கு அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி அரசை அமைக்க வேண்டும். ஜனாதிபதியுடன் எம்மால் (ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி) மாத்திரமே இணக்கமாகச் செயற்பட முடியும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் யாழ்ப்பணத்தில் குறிப்பிட்ட விடயத்தை தெற்கில் மாற்றியமைத்துள்ளார். அரசியல் தேவைகளுக்காக இரட்டை வேடம் போடுபவர்களை மக்கள் ஆதரிக்கமாட்டார்கள். நான் வடக்குக்கு ஒன்றையும் தெற்குக்குப் பிறிதொன்றையும் ஒருபோதும் குறிப்பிடமாட்டேன்” – என்றார்.