அம்பாறை தமிழர் இழந்தவற்றை மீட்டெடுத்து கொடுப்பதே இலக்கு – கருணா

“அம்பாறை மாவட்ட தமிழர்கள் இழந்தவைகள் ஏராளம். இனி இழப்பதற்கு ஏதுமில்லை. அவைகளை மீட்டெடுக்க ஒன்று சேர வேண்டும். இது காலத்தின் தேவை.”

– இவ்வாறு முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இற்றைவரை தமிழர்களுக்கு எதிரான அரசியல் செயற்பாடுகளைக் கண்டும் காணாமலும் எமது தலைவர்கள் நகர்த்தி வந்தார்கள். அவைகளுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய திராணி நிறைந்த தமிழ் அரசியல்வாதிகளை நாம் இற்றைவரை தெரிவு செய்திருக்கவில்லை என்பதை அனைவரும் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும்

அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 46 பூர்வீக தமிழ்க் கிராமங்கள் அழிக்கப்பட்டுள்ளன என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எழுதிய   ‘அழிக்கப்பட்ட தமிழ்க் கிராமங்கள்’ என்ற நூலில் ஆதாரங்களோடு குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணம் கரவாகு, திராய்க் கேணி கிரமங்களாகும்.

இது மாத்திரமா? இறுதியாக கல்முனைப் பகுதி தமிழ் மக்களின் பிரதேச செயலகத்தின் அந்தஸ்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

ஆதலால் நாம் இவைகளுக்கு ஒரு தடைவேலியை முதலில்போட்டு நாம் இழந்தவைகளை மீட்டெடுக்க வேண்டும். இனி நாட்டை ஆளப்போவது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி. எனது அரசியல் குரு பிரதமர் மஹிந்த ராஜபக்ச. எனக்கு அதிகாரத்தை தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தரவேண்டும். நான் மஹிந்தவுடன் பயணிப்பேன். எனது வேகத்துக்கும் விவேகத்துக்கும் யாரும் ஈடுகொடுக்க முடியாது. இழந்தவைகள் மீட்டெடுக்கப்படும். அக்கருத்தில் மாற்றமில்லை” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!