தப்பிச் சென்ற கொரோனா நோயாளி மடக்கிப் பிடிப்பு

முல்லேரியா தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் கைதுசெய்யப்பட்டார் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையான, குற்றச் செயலில் தொடர்புடையவரே தப்பிச்சென்றவராவார்.

இவர் கந்தக்காடு போதைப்பொருள் தடுப்பு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அங்கு இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக, முல்லேரியா தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை அங்கிருந்து தப்பிச் சென்றார்.

அவரைக் கண்டுபிடிக்கப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியிருந்தனர். இராணுவ புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் அவரைக் கண்டுபிடிக்க முடிந்தது என இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர் பொலிஸாரின் கண்காணிப்பில்  மீண்டும் முல்லேரியா தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சேர்க்கப்படவுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தப்பி ஓடியவரைக்  கண்டுபிடிக்க உதவிய, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர், கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிக்குழாம், ஊடகங்கள்,  பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பதில் பொலிஸ்மா அதிபர் தனது விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!