உலக தலைவர்களின் நேரடி பங்கேற்பு இல்லாமல் நடைபெறும் கூட்டம்

ஐ.நா வரலாற்றில் முதன் முதலாக உலகத் தலைவர்களின் நேரடிப் பங்கேற்பு இல்லாமல் பொதுச் சபைக் கூட்டம் நவம்பர் மாதம் நடக்க உள்ளது.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம் ஆண்டுதோறும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும். ஒரு வாரத்துக்கும் மேல் நடைபெறும் இந்த கூட்டத்தில் ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சிறப்பு மிக்க ஐ.நா. பொதுச்சபை அரங்கில் நின்றவாறு உலகுக்கு உரையாற்றுவார்கள்.

இதனால் ஐ.நா. தூதர்கள், அரசு அதிகாரிகள், சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் நியூயார்க்கில் ஒன்றுகூடுவார்கள். இதனால் அந்த நகரம் சில வாரங்களுக்கு பரபரப்புடன் காணப்படும்.

 இந்த ஆண்டுக்கான பொதுச்சபை கூட்டம் எதிர்வரும் செப்டம்பர் 15-ஆம் திகதி தொடங்குகிறது. ஐ.நா.வை பொறுத்தவரை இந்த ஆண்டு மிகவும் சிறப்பானதொரு ஆண்டாகும். ஏனெனில் ஐ.நா. தொடங்கப்பட்ட 75-வது ஆண்டை இந்த ஆண்டு ஐ.நா. கொண்டாடுகிறது. இதற்காக இன்னும் சிறப்புடன் பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த ஐ.நா. திட்டமிட்டு இருந்தது.

ஆனால் இந்தக் கொண்டாட்டத்தில் பேரிடியாக விழுந்திருக்கிறது கொரோனா எனும் வைரஸ். உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை காவு கொண்டு வரும் இந்த வைரசிடம் இருந்து தப்புவதற்கு கூட்டங்களை தவிர்ப்பதும், சமூக இடைவெளியை பின்பற்றுவதும் முக்கியமாகும்.

எனவே இந்த ஆண்டு பொதுசபை கூட்டத்தில் தலைவர்களை நேரடியாக பங்கேற்கச்செய்ய வேண்டாம் எனவும், மெய்நிகர் முறையில் (வீடியோ பதிவு) பங்கேற்பது எனவும் ஐ.நா. முடிவு எடுத்து உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையானது நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.

அதன்படி, ‘அனைத்து உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு போன்றவை தங்கள் தலைவர், துணைத்தலைவர், பட்டத்து இளவரசர், இளவரசர், அரசு தலைவர், மந்திரி அல்லது துணை மந்திரி போன்றோரின் உரையை முன்கூட்டியே வீடியோவாக பதிவு செய்து, அதை ஐ.நா.வின் இந்த 75-வது அமர்வின் பொது விவாதத்தின்போது, பொதுசபை அரங்கில் ஒளிபரப்ப வேண்டும். முன்னதாக பொதுசபை அரங்கில் நேரில் கலந்து கொள்ளும் அவர்களின் பிரதிநிதி ஒருவர் தங்கள் நாட்டு தலைவரை அறிமுகம் செய்வார்’ என முடிவு செய்யப்பட்டது.

ஐ.நா.வின்75-வது ஆண்டு சிறப்பு கூட்டம் செப்டம்பர் 21 -ஆம் திகதி நடைபெறும். இந்த கூட்டத்தின் முடிவில் சிறப்பு பிரகடனம் வெளியிடப்படும். 75-வது அமர்வின் பொது விவாதம் 22 -ஆம் திகதியும், உயிர்-பன்முகத்தன்மை மாநாடு 30 -ஆம் திகதியும்,  4-வது உலக மகளிர் மாநாட்டின் 25-வது ஆண்டுவிழா அக்டோபர் 1 -ஆம் திகதியும்   நடைபெறும். இந்த கூட்டங்கள் அனைத்தும் மெய்நிகர் முறையிலேயே நடத்தப்படும்.

தலைவர்கள் நேரடியாக பங்கேற்காமல், மெய்நிகர் மற்றும் காணொலி முறையில் பங்கேற்பதற்காக ஐ.நா.வில் கடந்த மார்ச் முதலே தொலைத்தொடர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஏனெனில் அமெரிக்காவில் கொரோனாவின் பெரும் மையமாக, ஐ.நா. அமைந்துள்ள நியூயார்க் நகரம்தான் அமைந்தது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐ.நா.வில் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

எனினும் ஐ.நா.வில் கடந்த 20-ஆம் திகதி முதற்கட்ட மறுதிறப்பு நடந்துள்ளது. அதன்படி ஐ.நா. வளாகத்தில் அதிகபட்சமாக 400 பேர் அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. 2-ம் கட்ட மறுதிறப்பில் 10 முதல் 40 சதவீத மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த 2 கட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில் 3-வது கட்ட மறுதிறப்பு நடைபெறும் என ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா.வின் சிறப்பு மிக்க 75-வது ஆண்டு பொதுசபை கூட்டத்தில் தலைவர்கள் நேரடியாக பங்கேற்க முடியாமல் போயிருப்பது சர்வதேச அரங்கில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!