’13’ திருத்தத்தில் அரசு கைவைக்க முடியாது – வாசுதேவ நாணயக்கார
“புதிய பாராளுமன்றத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்படும் என்று ஆளுந்தரப்பு அரசியல்வாதிகள் பிரபல்யமாகுவதற்கு தெரிவித்துக்கொள்கின்றார்கள். 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும். இனப்பிரச்சினைக்குத் தீர்வாக இரு நாடுகளை உள்ளடக்கி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தோற்றம் பெற்ற மாகாண சபை முறைமையை இரத்துச் செய்யவே முடியாது. இதுவரை காலமும் அது எவராலும் இயலாத ஒரு காரியமாகவே உள்ளது. இனியும் அவ்வாறே இருக்கும்.”
– இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருமித்த நாட்டுக்குள் 13ஆவது அரசமைப்பின் திருத்தம் ஊடாக அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்று கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக்கொள்ளக் கூடியது.
தமிழ் மக்களுக்கு அரசமைப்பின் பிரகாரம் தீர்வு வழங்கப்பட வேண்டும். அந்தத் தீர்வு ஒருமித்த நாட்டுக்குள் முரண்படாத விதத்தில் அமைய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இதில் எக்காலத்திலும், எக்காரணிகளுக்காவும் ஒருபோதும் மாற்றம் ஏற்படாது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி பொதுத்தேர்தலுக்கான கொள்கைப் பிரகடனத்தை இம்முறை வெளியிடவில்லை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளியிட்ட சுபீட்சமான எதிர்காலத்துக்கான கொள்கையை 52.25 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். நிறைவுபெற்ற 8 மாத காலத்தில் இந்த ஆதரவு சதவீதம் உயர்வடைந்துள்ளதே தவிர குறைவடையவில்லை.
ஜனாதிபதியின் கொள்கைத் திட்டங்களை புதிய அரசில் முழுமையாகச் செயற்படுத்த ஆளும் தரப்பில் கூட்டணியமைத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளார்கள். ஆகவே, இவ்வாறான நிலையில் பொதுத்தேர்தலுக்கான பொதுஜன முன்னணி தனித்துக் கொள்கைத் திட்டத்தை தயாரித்தால் நிறைவேற்றுத்துறைக்கும், சட்டத்துறைக்கும் இடையில் வீண்முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசில் ஒருமித்த நாட்டுக்குள் முரண்பாடற்ற வித்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும். புதிய அரசில் இனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது. அபிவிருத்திகளுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படும்” – என்றார்.