உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் நிர்ணயம்: அளுத்கமகே; ஆதாரம் கோருகிறார் மஹேல
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் போட்டி நிர்ணயம் இடம்பெற்றது என, அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்த நிலையில், அதற்கான ஆதாரங்களை வழங்குமாறு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன கோரியுள்ளார்.
இந்த உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை, இந்திய அணிகள் மோதியிருந்த நிலையில், இந்திய அணி வெற்றிபெற்று, உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில், நியூஸ் பெர்ஸ்ட் ஊடகத்துக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்த அளுத்கமகே, அப்போட்டி நிர்ணயம் செய்யப்பட்டது என உறுதியாகத் தெரிவித்ததோடு, பொறுப்புடன் அக்கருத்தை வெளியிடுவதாகத் தெரிவித்தார்.
ஆனால், தனது கருத்துக்கான ஆதாரங்கள் எவற்றையும் வெளிப்படுத்த மறுத்த அவர், நாட்டைக் கருத்திற்கொண்டு மேலதிக விடயங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.
“கிரிக்கெட் வீரர்களை இதில் நான் சம்பந்தப்படுத்த மாட்டேன். ஆனால், சில குழுக்கள் இப்போட்டியை நிர்ணயிப்பதில் நிச்சயமாக ஈடுபட்டன” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், அப்போட்டியில் விளையாடி, சதமொன்றையும் பெற்றிருந்த மஹேல ஜெயவர்தன, முன்னாள் அமைச்சரின் கருத்துத் தொடர்பில் தனது டுவிட்டரில் கருத்துத் தெரிவிக்கும்போது, “தேர்தலொன்று விரைவில் இடம்பெறப் போகிறதா? வேடிக்கை விளையாட்டு ஆரம்பித்துவிட்டது போலிருக்கிறது” என்று தெரிவித்ததோடு, இக்குற்றச்சாட்டு தொடர்பான பெயர்களையும் ஆதாரங்களையும் வெளிப்படுத்துமாறும் கோரினார்.