அரசியல் கைதிகள் விடயத்தை அரசுடன் பேசியே தீர்க்க முடியும் – கனகரட்ணம்
“சிறைச்சாலைகளில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயத்தை அரசுடன் பேசியே தீர்க்க முடியும். எனது மகனும் 11 வருடங்களாக சிறையில் இருப்பதால் அதன் வலி எனக்குத் தெரியும்.”
– இவ்வாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான சதாசிவம் கனகரட்ணம் தெரிவித்தார்.
வவுனியா தமிழ் ஊடக சங்கத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தாவது:-
“தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் எனக்கு நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. அரசு சார்பில் வன்னி மாவட்டத்தில் இருந்து இருவர் தெரிவுசெய்யப்படக் கூடிய நிலை இருக்கின்றது. அதில் ஒரு தமிழனை நீங்கள் அனுப்ப வேண்டும்.
வன்னி மாவட்டத்தில் நீண்ட காலமாக அரசுடன் சேர்ந்து மக்கள் பிரதிநிதியாக இருந்த தமிழர் ஒருவரும் இல்லை. ஆகவே, இந்தத் தேர்தலை சரியாக மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிவு செய்தால் வன்னிப் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து விடயங்களையும் செய்யக் கூடியதாக இருக்கும்.
வன்னி போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்குள்ள மக்கள் துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து கொண்டிருக்கின்றார்கள். அரசுடன் இணைந்து நாம் அவர்களின் துயரங்களைப் போக்க வேண்டும். கடந்த காலத்தில் நடைபெற்ற அபிவிருத்தி, வேலைவாய்ப்பு என்பன தமிழ் மக்களிடம் வருவது குறைவு. இதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.
எனக்குப் போடப்படும் வாக்கு முதன்மை வேட்பாளருக்குச் செல்லும் எனத் தப்பான ஒரு கருத்தை சிலர் பரப்பி வருகிறார்கள். ஆனால், அப்படியல்ல. ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் விருப்பு வாக்குகளே கவனத்தில் கொள்ளப்படும் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். கூடுதலான வாக்குளைப் பெறுபவரே தெரிவு செய்யப்படுவார். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மஹிந்த அரசால்தான் எமது அழிந்து போன மாவட்டத்தை கட்டியெழுப்ப முடியும்.
அரசியல் கைதிகள் விடயம், காணி விடுவிப்பு, காணாமல்போனோர் பிரச்சினை தொடர்பில் அரசுடன் பேசியே தீர்வைப் பெற முடியும். போரின்போது உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. போராளிகள், மக்கள் எனப் பலரும் கொல்லப்பட்டார்கள். போர் முடிந்த பின் அவை நிறுத்தப்பட்டுள்ளது.
தேசியம் பேசுபவர்களுக்கு நாம் எதிரானவர்கள் அல்லர். அவர்கள் வரட்டும். ஆனால், அரசுக்குள் ஒரு தமிழன் வர வேண்டும். அதற்காக மக்கள் செயற்பட வேண்டும். அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான ஒரு சந்தர்பத்தை கடந்த ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார். ரணிலா அல்லது மஹிந்தவா பிரதமர் என்ற நிலை வந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை செய்திருக்க முடியும்.
அப்போது மஹிந்தவுக்கு ஆதரவு கொடுத்தால் சில பிரச்சினைகளைத் தீர்ப்பதாக வாக்குறுதி வழங்கினார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டது. அப்போது அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள், காணிகளை விடுவியுங்கள் எனப் பேசியிருக்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் அரசிடம் சோரம் போனார்கள்.
எனக்கு அதிக மக்கள் வாக்களித்தால் மக்கள் என்னுடனும், அரசுடனும் இருக்கின்றார்கள் என்பதைக் காட்டி இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். எனது பிள்ளையும் 11 வருடமாக சிறையில் இருக்கின்றார். அந்த வலி எனக்குத் தெரியும். இங்குள்ள மக்களின் வலிகளைச் சுமந்தவன் என்ற வகையில் அரசுடன் பேரம் பேச முடியும்” – என்றார்.