கொரோனாத் தொற்றுக்குள்ளாகிய 906 கடற்படையினரும் குணமடைவு
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து கடற்படை உறுப்பினர்களும் பூரண குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையைச் சேர்ந்த கடைசி மூன்று கடற்படையினரும் நேற்று குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படையின் புதிய ஊடகப் பேச்சாளர் கப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் ஜா-எல, சுதுவெல்ல பகுதியில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் போதைக்கு அடிமையான நபர் ஒருவரைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்காகச் சென்ற கடற்படையைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி, வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை உறுப்பினர் ஒருவர், திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட கடற்படை உறுப்பினருடன் அதே உறைவிடம் மற்றும் அலுவலக இடங்களைப் பகிர்ந்துகொண்ட ஏனைய கடற்படை சிப்பாய்களும் மற்றும் அவருடன் தொடர்பைப் பேணிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட சோதனையில் முதலாம் கொரோனா தொற்றாளர் உள்ளிட்ட 30 கடற்படையினர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதன் காரணமாக வெலிசறை கடற்படை முகாமும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரல் 27 முதல் ஜூன் 23 வரை இரண்டு மாதங்களுக்கு மேலாக வெலிசறை கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டு மூடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து வெலிசறை முகாமில் கடற்படையைச் சேர்ந்த 906 பேருக்கு கொரோனா தொற்று பரவியிருந்ததோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அவர்களுடன் தொடர்புபட்ட 44 பேருக்கு கொரோனாத் தொற்று பரவியிருந்தது. இந்நிலையில், தற்போது அவர்கள் அனைவரும் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்த கடற்படையினர் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய, அவர்கள் மேலும் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இறுதியாக குணமடைந்த கடற்படை உறுப்பினர்கள் மூவரும் இரணவில வைத்தியசாலையிலிருந்து நேற்றுக் குணமடைந்து வெளியேறியுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.