மாநகர சபையும் தமிழ் அரசியல்வாதிகளுமே குருநகரின் அவல நிலைக்குக் காரணம் – கணேஷ் வேலாயுதம்
![](http://www.akaramnews.com/wp-content/uploads/2020/07/கணேஸ்வரன்-வேலாயுதம்-_2.jpg)
”குருநகரின் அவல நிலைக்கு யாழ்ப்பாண மாநகர சபையும் தமிழ் அரசியல்வாதிகளுமே காரணம்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர் கணேஷ் வேலாயுதம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“மக்கள் சந்திப்புக்காக குருநகருக்கு நான் சென்றிருந்தேன். அங்குள்ள மக்களில் ஒருசாரார் தங்கள் துயரத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்களோடு நேரடியாக அங்குள்ள அவல நிலையைப் பார்த்தேன்.
யாழ்ப்பாண நகரிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் குருநகர் உள்ளது. இதற்கு அடுத்த கிராமம்தான் மேயராகப் பதவி வகித்த இம்மானுவேல் ஆர்னோல்ட்டின் வசிப்பிடமாகும்.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அந்தப் பகுதியில் வாழும் குறிப்பிட்ட மக்கள், தமக்குச் சொந்தமாக காணியோ அல்லது வீடோ இல்லாமல் கால்வாய்களுக்கு மேல் வீடுகளை கட்டிக்கொண்டு வாழ்கின்றார்கள். மிகக் குறுகிய பகுதிக்குள்ளேயே பல குடும்பங்கள் லயன் போல் வீடுகளை அமைத்துக்கொண்டு வாழ்வதைப் பார்க்க பரிதாபமாக உள்ளது.
இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இவர்களது வீடுகளை இடிக்கப் போவதாக மாநகர சபை அறிவித்துள்ளது என அந்த மக்கள் கவலையோடு தெரிவித்தார்கள்.
கம்பெரலிய வீட்டுத் திட்டங்கள் போன்றவை வடக்குக்கு வந்தபோதும் அங்கு காலாகாலமாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள், தங்களுக்கு வீடுகளைக் கட்டித்தரவில்லை எனவும், 200 சதுர அடி பரப்புக்குள் 6 குடும்பங்கள் வீதம் ஒரே வீட்டுக்குள் 6 – 7 குடும்பங்கள் வாழ்கின்றன எனவும், தேர்தல் காலத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளைத் தந்து விட்டு வாக்குகளைக் கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள், அதன்பின் அங்கு வருவதே இல்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
குருநகரின் சிறியதொரு பரப்பில் பல குடும்பங்கள் வாழுகின்றார்கள். அவர்கள் வாழும் வீடுகளுக்கு அருகிலுள்ள கால்வாய்களைச் சுத்தம் செய்ய மாநகர சபையினர் செல்வதில்லை. அங்கு மிக மோசமான துர்நாற்றம் வீசுகின்றது.
யாழில் அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள், யாழ். மாநகர சபை மற்றும் வடக்கு மாகாண சபை ஒரு உதவியையும் செய்யாமல் குருநாகல் மக்களை இப்படியான அவல வாழ்வுக்குத் தள்ளியுள்ளன.
நான் தேர்தலில் வென்று பதவிக்கு வந்தால் ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இதுபோன்ற விடயங்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மக்கள் வாழ்வை மலரச் செய்வேன்” – என்றார்.