குறைந்த அளவினருக்கே ஹஜ்ஜுக்கு அனுமதி
குறைந்த அளவினரே ஹஜ்ஜுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என சவுதி அரேபிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
சவுதி அரேபியா கொரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடுவதால் சுமார் 1,000 முஸ்லீம் யாத்ரீகர்களை மட்டுமே ஹஜ் செய்ய அனுமதி அளித்துள்ளது. இந்த ஹஜ் ஜூலை 29 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சவுதி அரேபியாவுக்கு வெளியில் இருந்து வரும் ஹஜ் பயணிகளை விலக்குவதற்கான முடிவு நாட்டின் நவீன வரலாற்றில் முதன்மையானது மற்றும் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களிடையே ஏமாற்றத்தைத் ஏற்படுத்தி உள்ளது, இருப்பினும் தொற்றுநோய் காரணமாக இது அவசியம் என்று பலர் ஏற்றுக்கொண்டு உள்ளனர்.
மக்காவுக்கு வருவதற்கு முன்னர் யாத்திரீகர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், ஹஜ்ஜிற்கு பிறகு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சவுதியை தளமாகக் கொண்ட முஸ்லீம் உலக லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவை யாத்திரீகர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ளன.
அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஹஜ் பயணம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சவுதி பொருளாதாரம் 12 பில்லியன் டொலர் ஈட்டுகிறது.