சுயநலவாதக் கும்பல்களால் கூட்டமைப்பு சிதைந்துவிடக்கூடாது – சரவணபவன்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக்கோ அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. தியாக சிந்தையுடன் தமிழ மக்களால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. இது சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக் கூடாது.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போராட்ட வரலாறு தெரியாத பலர் இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியத் தலைவர் பிரபாகரனின் பெயரை ஏலம் போட்டு விற்கின்றனர். சிலர் உரிமை கொண்டாடுகின்றனர். மறுபக்கம் சிலர் அவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழித்தே தீருவோம் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகின்றனர். இது பகல் கனவு. இவர்களை நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் பேரினவாத ராஜபக்ச குடும்பத்துக்குப் போடும் வாக்காகவே அமையும். தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியம் என்று கூறிக்கொண்டே சிங்களப் பேரினவாதிகளுக்கு முண்டு கொடுக்க முனைகின்றனர்.

அன்று முதல் இன்றும் என்றும் நம் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதும் போராட்டங்களை நடத்துவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான். நாம் மேடைகளில் மட்டும் வாய்ப்பந்தல் போடுபவர்கள் அல்லர். நமது தலைவர்கள் செய்த தியாகங்களை மக்கள் மறந்துவிடவில்லை. அதனால்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக்கோ அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. தியாக சிந்தையுடன் மக்களால் கட்டி எழுப்பப்பட்ட கட்சி.  இது சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக் கூடாது.

தமிழர் தயாகத்தைப் பாதுகாத்து எமது உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய ஒரே அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுதான்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!