கொரோனா பரவியதால் ஈரானில் மீண்டும் மூடப்பட்ட மசூதிகள்

ஈரான் தலை நகர் தெஹ்ரானில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு மசூதிகள் மீண்டும் மூடப்பட்டன.

இதுகுறித்து தெஹ்ரான் ஊடகங்கள் தரப்பில், “ தெஹ்ரானில் கரோனா பலி மற்றும் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெஹ்ரானில் செவ்வாய்க்கிழமை முதல் சுமார் 890 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் ஈரானில் அதிகபட்சமாக ஒரே நாளில் கொரோனாவுக்கு 200 வரை உயிரிழப்பு பதிவானது.தெஹ்ரானில் மசூதிகள் மட்டும் மல்லாது உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி முன்னரே தெரிவித்திருந்தார்.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பெப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!