ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் – ட்ரம்ப்
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடக்ககும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. இந்த பேரிடருக்கு மத்தியிலும் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலை சந்திக்கவுள்ளது. வருகிற நவம்பர் 3-ஆம் திகதி அங்கு ஜனாதிபதித் தேர்தல் நடக்க இருக்கிறது.
இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறக்கப்பட்டு உள்ளார்.
கொரோனோ வைரஸ் பாதிப்பு ஒருபுறமிருந்தாலும் தேர்தலுக்கான காலம் நெருங்கி வருவதால் அமெரிக்க அரசியல்வாதிகள் தேர்தல் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸை கையாண்ட விதம், அதனால் ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி, எதிர்கட்சி ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.
இதன் காரணமாக இந்த தேர்தலில் ஆளும் கட்சியின் பலம் குறையலாம் என கருத்துக்கணிப்புகள் வெளியாக தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்தார்