எதிர்வரும் நாட்கள் மிக ஆபத்தானவை – இராணுவத் தளபதி
“நாட்டில் அடுத்து வரும் சில நாட்கள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளதால் தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில்கொண்டு பொதுமக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிந்து செல்வதோடு இயன்றவரை சமூக இடைவெளியைப் பேண வேண்டும்.”
– இவ்வாறு கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
தலதா மாளிகையில் வருடாந்தம் நடைபெறும் பெரஹர உற்சவத்தில் இராணுவத்தின் சார்பில் மத வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக நேற்றுப் புதன்கிழமை கண்டிக்குச் சென்றிருந்தபோது ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“எதிர்வரும் சில நாட்கள் மிகவும் ஆபத்து உடையவை. எந்த அலை வந்தாலும் அது சமூகத்தினுள்ளேயே வர வேண்டும். மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பெரும் அர்ப்பணிப்புடன் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றியதன் காரணமாகவே கொரோனா வைரஸ் பரவலை ஓரளவு கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது.
கந்தக்காடு போதைப்பொருள் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் சேவையாற்றியவர்களும் அங்கு தொற்றுக்குள்ளானவர்கள் உள்ளனர் என்பதை அறிந்திருக்கவில்லை. அறியாமையின் காரணமாக அவர்கள் சில இடங்களுக்குச் சென்றுள்ளனர். எனவே, பொதுமக்கள் நிலைமையை அறிந்து செயற்பட வேண்டும்.
வீடுகளிலிருந்து வெளியில் செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசங்கள் அணிவது செல்ல வேண்டும். அத்தோடு கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பதோடு இயன்றளவு சமூக இடைவெளியைப் பேண வேண்டும். இவற்றைப் பின்பற்றும்போது வைரஸ் பரவல் தீவிரமடைவதை எம்மால் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். எவ்வாறிருப்பினும் ஒவ்வொரு பிரஜைகளும் தாம் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகாதவராக இருக்க வேண்டும் என்ற பொறுப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை விசேட கலந்துரையாடல் நடைபெற்றது. இவ்வாறான சூழலில் அரசால் உண்மைகள் மறைக்கப்படுகின்றன என்று கூற முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் முப்படையினர், பொலிஸார், சுகாதாரத்துறையினர் உள்ளிட்டோரைப் பயன்படுத்தி கொரோனாவை நாட்டில் முழுமையாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்” – என்றார்.