‘கொரோனா’ தாண்டவமாடினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்
“இலங்கையில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவினால் மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.”
– இவ்வாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் பிரகாரம் ஊரடங்கு பிறப்பிக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. ஓரிரு இடங்களிலேயே பிரச்சினை இருக்கின்றது. நாடு தழுவிய ரீதியில் வைரஸ் தாக்கம் இருந்தால்தான் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பரிசீலிக்கக் கூடியதாக இருக்கும்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தால் ஊரடங்குச் சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லவேண்டி ஏற்படும். அதற்கான தேவை தற்போது எழவில்லை. எதிர்காலத்திலும் அவ்வாறானதொரு நிலை உருவாகாது என நம்புகின்றோம்” – என்றார்.