ராஜபக்ச அரசு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்காது – ரணில்

“நல்லாட்சியில் புதிய அரசமைப்புக்கானப் பணிகளைக் குழப்பியடித்த ராஜபக்ச தரப்பினர் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் தீர்வு வழங்க முன்வரமாட்டார்கள்.” – இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

“ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைத்தால் மாத்திரமே தமிழர்களுக்கான தீர்வு சாத்தியப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான புதிய அரசில் தமிழ் மக்களுக்கான தீர்வு எத்தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத விதத்தில் வழங்கப்படும் என்று மஹிந்த அணியினர் தெரிவித்துவரும் கருத்துக்களுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் மனதை வென்றவர்கள் நாம். அவர்களும் எம்மை முழுமையாக நம்பினார்கள். அதனால் நல்லாட்சியில் அரசியல் தீர்வைத் தவிர தமிழர்களின் ஏனைய பிரச்சினைகளுக்கு எம்மாலான தீர்வுகளை வழங்கினோம்.

நல்லாட்சியில் புதிய அரசமைப்புப் பணிகளையும் முன்னெடுத்தோம். ஆனால், அன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த ராஜபக்ச அணியினர் அதனைக் குழப்பியடித்துவிட்டனர். நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் அவர்கள் இனவாதக் கருத்துக்களைத் தெரிவித்து பௌத்த தேரர்களையும் சிங்கள மக்களையும் எமக்கு எதிராகத் திருப்பினர். அதையடுத்தே புதிய அரசமைப்புக்கான பணிகளை இடைநிறுத்தினோம். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தமிழ் மக்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த விடயம்.

இவ்வாறான குழப்ப நடவடிக்கைளில் ஈடுபட்ட  ராஜபக்ச தரப்பினர் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வு வழங்க முன்வரமாட்டார்கள். இதை உணர்ந்துதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவை நிராகரித்தார்கள். ஐக்கிய தேசியக் கட்சி தனியாட்சி அமைத்தால் மாத்திரமே தமிழர்களுக்கான தீர்வு சாத்தியப்படும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!