தென் சீன கடல் சீனாவுக்கு சொந்தமல்ல – மைக் போம்பியோ

தென் சீன கடல் பகுதியை ஆக்கிரமிக்கத் துடிக்கும் சீனாவின் திட்டத்தை, உலக நாடுகள் ஒருபோதும் அனுமதிக்காது,”என, அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர், மைக் போம்பியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”தென் சீன கடல் பகுதியில், அமைதியும், ஸ்திரத்தன்மையும் நிலவ வேண்டும் என, அமெரிக்கா விரும்புகிறது. அதற்கு மாறாக, மலேஷியாவில் இருந்து, 50 கடல் மைல் துாரமுள்ள, ஜேம்ஸ் ஷாவோல் தீவை, ஆயிரம் கடல் மைல் துாரத்தில் உள்ள, சீனா, சொந்தம் கொண்டாடுகிறது.

அதுபோல, பிலிப்பைன்ஸுக்கு சொந்தமான, ஸ்பராட்லி தீவுகளை, பொருளாதார மண்டலமாக மாற்ற, சீனா முயற்சிக்கிறது. சீனா, தன் கடலோரத்தில் இருந்து, 12 கடல் மைல் தாண்டி, எந்த பகுதியையும் சொந்தம் கொண்டாட முடியாது.கடந்த, 2016, ஜூலை, 12 இல், கடல் விவகாரங்களுக்கான மத்தியஸ்த தீர்ப்பாயம், தென் சீன கடல் பகுதிக்கு உரிமை கோரி சீனா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, பிலிப்பைன்ஸுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனால், தென் சீன கடல் பகுதிக்கு, சீனா உரிமை கோர முடியாது.

சீனாவுக்கு சட்டப்படி அதிகாரமில்லை.அக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசிய கடலோர நாடுகளின் இறையாண்மைக்கு உட்பட்டது. அதை, சட்ட விரோதமாக ஆக்கிரமித்து, கடல் சாம்ராஜ்யத்தை நிறுவ சீனா முயல்கிறது.இதை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஒருபோதும் ஏற்காது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இறையாண்மையை காக்க, அமெரிக்கா என்றும் துணை நிற்கும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!