கட்டப்பாவாக சஞ்சய் தத்
கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதலில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத்தை அணுகியதாக பாகுபலி படத்தின் கதாசிரியர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இரண்டு பாகங்களாக வெளியான படம் பாகுபலி. முதல்பாகத்தில் கட்டப்பா(சத்யராஜ்) பாகுபலியை கொன்றது ஏன் என்ற கேள்வியுடன் முடிந்திருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலிலும் புதிய சாதனை படைத்தது.
படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் பதியும்படி அமைக்கப்பட்டிருந்தது. அதில், சத்யராஜ் நடித்த கட்டப்பா கதாபாத்திரமும் இன்று வரை பேசப்படும் பாத்திரமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் சஞ்சய் தத்தை தான் அணுகியதாக பாகுபலி படத்தின் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
சஞ்சய் தத் சிறையில் இருந்ததால், அவரை வெளியே அழைத்து வர முயற்சி செய்ததாகவும், அது சாத்தியமில்லை என்று தெரிந்த உடன் சத்யராஜை தேர்வு செய்ததாகவும் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார். மேலும், கட்டப்பா கேரக்டரில் சத்யராஜ் மிக அருமையாக நடித்திருந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.