மொரட்டுவை துப்பாக்கிச்சூடு: பொலிஸார் மூவர் பணி இடை நீக்கம்

மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைth தொடர்ந்து, அங்குலானை பொலிஸார் மூவர் பணி இடைநீக்கம்  செய்யப்பட்டுள்ளனர்.
 
அச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட், பொலிஸ் கான்ஸ்டபிள், பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகியோரே இன்று முதல்  பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, பொலிஸார் மூவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றுமுன்தினம் இரவு 11.45 மணியளவில் மொரட்டுவை, லுனாவ பிரதேசத்தில், அங்குலானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸாரினால், திடீரென வீதித் தடை ஏற்படுத்தி வாகனங்கள் சோதனையிடப்பட்டன.

இதன்போது, இரணு ஓட்டோக்களை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய வேளையில், ஒரு ஓட்டோவில் வந்தவர் அத்துமீறி செயற்பட்டதன் காரணமாக,  பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் படுகாயமடைந்த குறித்தவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மொரட்டுவையைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவரான நான்கு பிள்ளைகளின் தந்தையே (வயது 39) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், இந்தச் சம்பவத்தின்போது, மகனும், அவரது சகோதரனும் அந்த ஓட்டோவில்  இருந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நேற்று களுபோவில வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.

தலையில் துப்பாக்கிச் சூடு பட்டதன் காரணமாக மரணம் இடம்பெற்றுள்ளது எனப் பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 இது தொடர்பில் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், நேற்றிரவு அங்குலானை பொலிஸ் நிலையத்துக்கு  முன்னால் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எவ்வித பாரபட்சமும் இன்றி விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நாளை மொரட்டுவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்படவுள்ள மரண விசாரணையில் சாட்சியம் வழங்குவதற்காக,  பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜ்ர்படுத்தப்பட உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!