நாட்டை இரண்டாகக் கூறுபோடும் திட்டம் தோற்கடிப்பு – சீதா அரம்பேபொல

“இலங்கையை இரண்டாகக் கூறுபோடும் திட்டத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியே தடுத்து நிறுத்தியது.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசியப் பட்டியல் வேட்பாளரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான மருத்துவர்  தெரிவித்தார்.

மொட்டு அணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் சரத் வீரசேகரவை ஆதரித்து கொழும்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“2019 இல் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த நாடு எதிர்நோக்கியிருந்த அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவேண்டும் என்ற உணர்வுடனேயே நாம் அனைவரும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்தோம். அரசியல் என்பதற்கு அப்பால் தேசிய உணர்வு இருந்தது. அனைவரும் தேசியப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

சமஷ்டி அரசமைப்பு மூலம் நாட்டைக் கூறுபோடுவதற்கு பல வருடங்கள் முயற்சி எடுக்கப்பட்டுவந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியாலேயே அந்த முயற்சி கைவிடப்பட்டது என்பதை மறந்துவிடவேண்டாம். மகாநாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் சிலர் நடந்துகொண்டனர். அவர்களும் பின்வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

தேசிய பாதுகாப்பும் கருத்தில்கொள்ளப்படவில்லை. அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்ததும் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த வெற்றியாகும். இராணுவத்துக்குக் கிடைக்கவேண்டிய கௌரவமும் இவரால்தான் கிடைத்தது. நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாதுகாத்துக்கொள்ள முடிந்தது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முன்னால் பலம் பொருந்திய நாடுகள்கூட மண்டியிட்டன. ஆனால், அந்த அனர்த்தத்தை நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கினார். தேசிய போராட்டத்தில் வெற்றிபெற்றோம். அதனைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக நாட்டுக்காகப் போராடக்கூடிய சரத் வீரசேகர போன்றவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்” – என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected!