4000 ஓட்டங்கள் 150 விக்கெட்கள் பென் ஸ்டோக்ஸ் சாதனை
இங்கிலாந்து அணி கப்டன் பென் ஸ்டோக்ஸ் உலக சாதனைப் பட்டியல் ஒன்றில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டிக்கு மட்டும் பென் ஸ்டோக்ஸ் கப்டனாக செயல்படுகிறார்.
சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் 49 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் மூலம் 150 டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்தி முக்கிய மைல்கல்லை எட்டினார். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 43 ஓட்டங்கள் எடுத்தார்.
பென் ஸ்டோக்ஸ் தன் மூன்றாவது விக்கெட்டாக அல்சாரி ஜோசப்பை வீழ்த்திய போது 150 டெஸ்ட் விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டினார். அத்துடன் டெஸ்ட் போட்டிகளில் 4000 ஓட்டங்கள், 150 விக்கெட்கள் வீழ்த்திய சகலதுறை வீரர்கள் வரிசையில் இணைந்தார்.
இதுவரை ஐந்து வீரர்கள் இடம் பெற்றுள்ள அந்தப் பட்டியலில் ஆறாவதாக பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். கார்பீல்டு சோபர்ஸ், இயான் போத்தம், கபில் தேவ், ஜக்கஸ் கலிஸ், டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர்.
அதி வேகமாக 4000 ஓட்டங்கள் மற்றும் 150 விக்கெட்கள் வீழ்த்திய டெஸ்ட் சகலதுறை வீரர்கள் பட்டியலில் கபில் தேவ், ஜக் கலிஸ், இயான் போத்தம் ஆகியோரை முந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதல் இடத்தில் கார்பீல்டு சோபர்ஸ், இடம் பெற்றுள்ளார்.