பொன்னியின் செல்வன் – ரசிகனின் எதிர்பார்ப்பு [பகுதி 03]
காட்சி 8:
தஞ்சைக் கோட்டையில் புலவர்களுடன் சக்கரவர்த்திக்கு வந்த ஓலையை சின்னப் பழுவேட்டரையிரடம் காட்டி அனுமதி பெற்று சுந்தரசோழருக்கு கொடுக்க வந்தியத்தேவன் செல்கின்றான். சுந்தரசோழரின் பெருமைகளை புலவர்கள் போற்றும் காட்சியில் ஜெயமோகன் நிச்சயமாக தன் கைவரிசையைக் காட்டுவார் என நினைக்கின்றேன்.
அத்துடன் அங்கே சோழநாட்டிற்கு அபாயம் அபாயம் என சத்தமிட்ட வந்தியதேவனை சின்னப் பழுவேட்டரையர் ஓடவிடாமல் கையில் பிடித்தபோது அவன் அபயம் அபயம் என சத்தமிட்டேன் எனக்கூறி தப்பினாலும், பின்னர் சின்னப் பழுவேட்டரையினரால் அவனது ஆடைகள் களையப்பட்டு புத்தாடைகள் கொடுக்கப்படுகின்றன.
அப்போது அவன் இளையபிராட்டிக்கு கொண்டுவந்த ஓலையை காணாமல் திகைக்கின்றான். பின்னர் தன் சாமர்த்தியத்தால் அந்த ஓலையை சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து கைப்பற்றி தப்பியும் விடுகின்றான்.
காட்சி 9: சுந்தரச்சோழரின் கதை
படத்தின் நீளம் காரணமாக சுந்தரச்சோழர் எப்படி அரியணை ஏறினார் என்பது பெரும்பாலும் வெட்டுப்படலாம். இல்லாவிட்டால் ஒரு பாடல் மூலமாக அதனை மணிரத்னம் காட்டமுயலலாம். கண்டராதித்தரிடம் இருந்து அவரின் வாரிசுகளுக்கு கிடைக்காமல், சுந்தசோழன் எப்படி ஆட்சியில் அமர்ந்தார் என்பதை கல்கி ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருப்பார்.
காட்சி 10: வந்தியதேவன் நந்தினி சந்திப்பு
சின்ன பழுவேட்டரையரின் பாதுகாப்பில் இருந்த வந்தியதேவன் வேளக்காரப்படைகளில் ஊடுருவி தப்பிக்கின்றான். கோட்டையை விட்டு எப்படி வெளியேறுவது என அவன் சிந்தனை செய்யும் பொழுது அவனுக்கு ஒரு மர்ம மங்கை உதவி செய்கின்றாள். அவள் அவனை மந்திரவாதி என நினைத்துக்கொண்டு லதா மண்டபத்தில் நந்தினியை சந்திக்க உதவுகின்றாள்.
நந்தினியுடனான சந்திப்பில் வந்தியதேவன் தன்னை ஆழ்வார்க்கடியானுக்கு வேண்டியவன் எனவும் ஆழ்வார்க்கடியானுக்கும் நந்தினிக்கும் இடையிலான உறவு என்ன எனவும் வினவுகின்றான். குந்தவைக்கு ஓலை கொண்டுவந்ததாக வந்தியதேவன் நந்தினிக்கு கூறியபோது அவள் அவனை கோட்டையை விட்டு தப்பிக்க வழி சொல்வதாகவும் அதே நேரம் அவன் அதற்காக அவளுக்கு குந்தவை ஆதித்தகரிகாலனுக்கு கொடுத்தனுப்பும் மறு ஓலையை தனக்கு காட்டவேண்டும் எனவும் நிபந்தனை இடுகின்றாள். இவை எல்லாவற்றையும் கேட்ட வந்தியதேவன் திகைத்து நிற்கும் போது மூன்று தடவை ஆந்தையின் குரல் கேட்கிறது.
காட்சி 11 : நந்தினி ரவிதாசன் சந்திப்பு
மந்திரவாதி ரவிதாசனை நந்தினி சந்திக்கின்றாள். அப்போது ரவிதாசன் நந்தினிக்கு சம்பவம் ஒன்றைக்கூறி நாம் பழிக்கு பழி வேண்டவேண்டிய தருணம் நெருங்கிவிட்டது எனவும், ஆனால் அவள் இதனை எல்லாம் மறந்து பழுவேட்டரையருடன் சுகபோகத்தை அனுபவிக்கின்றாள் எனவும் கடிந்துகொண்டான்.
அத்துடன் வந்தியதேவனுக்கு முத்திரை மோதிரம் கொடுத்தது பிழை எனவும் கூறுகின்றான். நந்தினி அவனை சமாளித்துவிட்டு வந்தியதேவனை கோட்டையை விட்டு வெளியேற ரவிதாசன் உதவி செய்யவேண்டும் எனக்கூறிக்கொண்டு மாளிகைக்கு வெளியே வந்து பார்த்தால் அங்கே வந்தியதேவனை காணவில்லை.
காட்சி 12 : பெரிய பழுவேட்டரையர் சின்னப் பழுவேட்டரையர் சந்திப்பு
கடம்பூருக்கு சென்ற பெரிய பழுவேட்டரையர் மீண்டும் தஞ்சை அரண்மனைக்கு திரும்புகின்றார். வழக்கமாக அவரை கோட்டை வாசலில் நின்று வரவேற்கும் சின்னப் பழுவேட்டரையர் அன்று வந்தியதேவன் தப்பிச் சென்ற களேபரத்தில் அவரை வரவேற்கவரவில்லை.
பெரிய பழுவேட்டரையர் சின்னப் பழுவேட்டரையரின் மாளிகைக்கு சென்று அவரின் குழப்பத்திற்கான காரணம் என்ன என வினவ சின்னவரும் வந்தியத்தேவன் சக்கரவர்த்திக்கும் குந்தவைக்கும் ஓலை கொண்டுவந்ததும் பின்னர் தன் காவலில் இருந்து தப்பியதையும் சொல்கின்றார்.
அதே நேரம் பெரியவரும் தன்னுடைய திட்டப்படி மதுராந்தகனை அடுத்த பட்டத்து அரசராக்க கடம்பூரில் தன்னைச் சந்தித்த அனைத்து சிற்றரசர்களும் ஒப்புக்கொண்டார்கள் என்பதைக் கூறுகின்றார்.
தொடரும்…